உளவுகாத்த கிளி – 1

 லண்டன், இன்று

ப்ரிட்டிஷ் ஏர்வேஸின் 747 யானை ஸைஸ் ஜெட் இங்கிலாந்தின் தலை நகர் லண்டனை நெருங்கியது. கால்களை நீட்டி, தலை சாய்த்து, சிரமமின்றி உறங்கும் அளவுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள “வியாபாரக் க்ளாஸ்” ஸீட்டில் உறங்கிக்கொண்டிருந்த என்னை விமானப்பணிப்பெண் தோளில் லேசாகத் தட்டி எழுப்பினாள்.

“ஸீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளுங்கள்!” என்று, சன்னமான குரலில், ஆங்கிலத்தில் ‘சுப்ரபாதம்’ பாடினாள். கையில் தயாராக வைத்திருந்த, பால்-சர்க்கரை அற்ற காப்பிக் கோப்பையை நிர்மால்ய நைவேத்தியமாக நீட்டினாள்.

நன்றியை முணுமுணுத்தேன். கஷாயம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஜன்னல் வழியே தரையை தரிசித்தேன். ஜூலை மாதத்தின் மழை மேகங்கள் ஃப்ரான்ஸ் நாட்டின் கலேய் நகர் மீது ஈரக் குமிழிப் பெட்ஷீட்டைப் போர்த்தியிருந்தது.

ஆங்கிலக் கடல் கால்வாயை சில நொடிகளில் விமானம் கடந்தது. லண்டனில் இறங்கும் பணியின் இறுதிச் சடங்காக, அடி வயற்றில் மடித்து வைத்திருந்த சக்கரங்கள் பொருந்திய கால்களை விமானம் நீட்டிய அதிர்வை உணர்ந்தேன்.

பறவையின் முதுகிலிருந்து பிரிந்து மயிலிறகு கீழே விழுந்து தரையைத் தொடுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில், சுமார் 180 பயணிகளைச் சுமந்து வந்த அந்த ராட்சதப் பறவை, ரன்வேயில் தனது பாதங்களைப் பதித்தது.

அடுத்த 6-ஆவது நிமிடத்தில், ஹீத்ரோ வான்-பாலம் உபயத்தில் விமான நிலையத்தின் 4-ஆவது டெர்மினல் கட்டிடத்தினுள் கையில் வைத்திருந்த ஒரு சற்றே பருமனான ஸூட்கேஸையும், தோளில் தொங்கிய கம்ப்யூட்டர் பையையும் சுமந்தவாறு நுழைந்தேன்.

சில நொடிகளில் உரித்த கோழி தோல் நிறத்திலுள்ள, கறுத்த அங்கி அணிந்திருந்த பெண் இம்மிக்ரேஷண் ஆஃபீஸர் முன் நின்று பாஸ்போர்ட்டை நீட்டினேன்.

பல முறை இங்கிலாந்து வந்ததன் அடையாளங்களான நீல நிற வடுக்கள் எனது கடவுச்சீட்டின் பல பக்கங்களை அலங்கரித்தன. நான் பொருளாதாரக் காரணங்களுக்கான அகதியாகிவிடுவேனோ என்ற சந்தேகம் எழ காரணங்களே கிடையாது. நான் ஒரு தனியார் நிறுவனத்தின் சிப்பந்தி என்ற பாதி உண்மை, தெளிவாக, எனது கடவுச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. ஆக, நான் ‘விஜய் மல்லையா ரக’ பதுங்கும் பணக்காரனல்ல என்பதை ஆவணம் உணர்த்தியது.

“இந்த முறை எத்தனை நாள் தங்கப்போறீங்க?”

அந்தப் பெண் கேட்டது, இயல்பான, சம்பிரதாயமான கேள்வி.

அசட்டு ஜோக்குகளை, வெள்ளையர்கள் வெகுவாக ரசிப்பார்கள்.

“உங்க நாடு ஐரோப்பிய ஒற்றுமைக் குழுமத்திலிருந்து கழற்றிக்கொண்டு விட்டது. ஆகவே, இங்கிலாந்து அரசியல் குழப்பத்தின் உச்சகட்டத்தை எட்டி விட்டது. எனக்கு அரசியல் தொழில் கொஞ்சம் நன்றாகவே தெரியும். பேசாமல் இங்கேயே தங்கி, உங்கள் நாட்டுக்குப் பிரதமராகும் பணியில் ஈடுபட்டால் என்ன என்ற எண்ணம் இந்தியாவில் விமானம் ஏறியது முதல், மூளைக்குள் ஒரு வித்தியாச நண்டுத்தனத்தோட பிராண்டுகிறது!”

சிரித்துக் கொண்டே இதைச் சொன்னேன்.

“அந்த எண்ணம் நிறைவேறினால், நான் வேலையை ராஜினாமா பண்ணி உங்க நாட்டுல உள்ள கோவா கடற்கரையில, குளுகுளு வசதியுள்ள கடலோரக் குடிசையில குடி ஏறவேண்டியது தான்.”

எனது பாஸ்போர்ட்டில் ரப்பர் ஸ்டாம்பால் மேலும் சில நீலப்புள்ளிகளுடனான நுழைவு அடையாளங்களை அந்தப் பெண் இளித்தவாறே பதித்தாள்.

“அது நடந்தால், பிரதமர் பதவி கிடைத்திருந்தாலும், அதைத் துறந்து இந்தியாவுக்கு உங்களைத் துரத்திக்கொண்டு வந்து பக்கத்துக் குடிசையை வாங்கி, குடியேறி, காலை முதல் மாலை வரை தமிழ் சினிமா ஹீரோ கணக்கா, உங்களைச் சுற்றி கேனத்தனமான காதல் பாட்டுக்களைப் பாடுவேன்,” என்றேன்.

லால்குடி முதல் லண்டன் வரை, ‘லந்து’ வசனத்தை, குறும்புடன், ‘டைமிங்’கில் சொன்னால் ரசிகைகளுக்குக் கிளுகிளுப்பு ஏற்படும். அவள் கிளுகிளுக்கினாள்.

விரைவில், எனது பள்ளி அறையில், “வாருங்கள்” என்றபடி இவளது கால்களை நிஜமாகவே நான் வருடும்போது இவள் ரசிப்பாள் என்ற எண்ணம் மனதில் உதித்தது.

“கனவுக் கன்னிகையே, இனி உன் கனவுக்கன்னங்கள் என் ஊணுக்கும் உறக்கத்திற்கும் கன்னம் வைத்துத் திருடி விடுமே! என்ன செய்வேன்,” என அங்கலாய்ப்பது போல நடித்தேன். பெருமூச்சு விட்டேன். அவள் மீண்டும் கலகல வென்றாள். நகர்ந்தேன்.

நான் இந்திய அரசின் ‘ஒரு மாதிரியான’ சிப்பந்தி.

அந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத ஒற்றன்.

என்போன்றவர்களின் தேவைகளை அரசு மிகவும் சரியாகப் பூர்த்தி செய்யும்.

பாகிஸ்தான் போன்ற நாட்டில் ரகசியமாக வேவு பார்க்கும்போது மாட்டிக் கொண்டால், புது டெல்லியின் ஏதேனும் ஒரு மூலையிலுள்ள அலுவலகத்திலிருந்தே, எனது சீனியர்கள், வாய்திறவாமல் “மங்களம்” பாடி விடுவார்கள். உறுப்புகள் பல கழற்றப்பட்ட நிலையில் – என் போன்றோரது உடலை இறுதிச் சடங்குகளுக்காகப் பெற உறவினர்கள் எழுப்பும் கெஞ்சலான கூக்குரலை, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அதிகாரிகள், பெரும்பாலும் காதில் வாங்கிக்கொள்ளக்கூட மாட்டார்கள். காதித் துணி அணியும் இந்திய அரசியல்வாதிகளோ, “மரண அபாயம் நிச்சயமென்பதை உணர்ந்து தானே அந்த ஆள் பணியில் அமர்ந்தான்! இதெல்லாம் இந்தத் தொழிலில் சகஜம்,” என்று கூறி, கை கழுவி விடுவார்கள்.

அந்த மாதிரி எதுவும் நடவாத வரை, நாங்கள் ராஜாவீட்டுக் கன்றுக்குட்டிகள் போல, அரசால் நன்றாக கவனிக்கப்படுவோம்.

மணிபர்ஸில் ப்ரிட்டிஷ் பவுண்டுகள் தேவைக்கேற்ப இருந்தன.

சுங்க அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும்படியான எந்தத் தடை செய்யப்பட்ட பொருளும் என்னிடம் இருக்கவில்லை. “ரைட் ராயல்” முறையில் விமான நிலையத்தின் கஸ்டம்ஸின் பச்சை நடைக் கால்வாயில் நீந்தி – ஸாரி – நடந்து வெளியே வந்தேன். விசாலமான “கடைத் தெரு-ஹாலில்” மக்டொனால்ட்ஸ் காஃபிக்கடையில், ஒரு பெரிய கோப்பை நிறைய சுடச்சுட “பருகும் சாக்லேட்டை” வாங்கினேன். அதைச் சீப்பிக் குடித்தபடி, அருகிலுள்ள மேஜையில் எனது தோல் ஜோல்னாப் பையைத் திறந்து, சிறைபட்டிருந்த எனது தொடைமீதமரும் கணினியின் உடலுக்கு விடுதலை அளித்தேன். அதனை உயிர்ப்பிக்கும் பாட்டரி-மின்சார பொத்தானை அழுத்தினேன்.

வை-ஃபை வசதியுடன் இன்டர்னெட் கனெக்சன் லண்டனின் விமான நிலைய இலவசங்களுள் ஒன்று. “பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன், நலம், நலம் அறிய ஆவல்,” என, வழக்கம்போல, எனது அலுவலகத்திற்கு மெஸேஜ் ஒன்றை அனுப்ப வேண்டிய ‘இன்றி அமையாத கடமையை’ நிறைவேற்ற, கணினியின் கடிதப் பெட்டியைத் திறந்தேன்.

‘செய்தி அனுப்புவதற்காக மட்டுமேதான் அந்த மெயில் பாக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது விதிமுறை. அச்செய்திகளை வெளி ஆள் எவனாலும் எளிதில் உடைத்துப் படிக்க முடியாது. அப்படி முயன்றால், மெஷீன் கோட் வார்த்தைகளில்தான் அது தென்படும். அலுவலகத்திலிருந்து எனக்கிடப்படும் கட்டளைகள் வேறொரு மெயில் பாக்ஸில் தான் வரும்.

கடிதப் பெட்டியைத் திறந்தவுடன் எனக்கு ஒரு அதிர்ச்சி.

செய்திகள் வரவே கூடாத அதில், எனக்கு யாரோ ஒரு மெஸேஜ் அனுப்பி இருந்தார்கள்.

நான் இந்திய உளவாளி என்பது வெளியே தெரியக்கூடாத விஷயம்.

இங்கிலாந்திற்கு நான் வந்திருப்பதன் காரணம் பரம ரகசியம்.

இந்த அளவுக்கு நமது பாதுகாப்பை மீறக்கூடியவர்கள், அங்குள்ள எல்லா தூண்களிலிருந்தும் துரும்புகளிலிருந்தும் என்னைக் கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.

இது போன்ற நேரங்களில் வந்திருக்கும் செய்தியை மதித்து நடப்பது உடலுக்கு நல்லது. மதிக்காவிட்டால், எவனாவது நரசிம்மாவதாரம் எடுத்து வயிற்றைக் கிழிக்காவிட்டாலும், ஒரு மாமாங்கம் வரை வலிக்கும் அளவுக்கு என்னை மடியவிடாமல் மிதிப்பான்.

செய்தியைப் படித்தேன்.

“ஒரு மணி நேரத்திற்குள் வாக்ஸ்ஹால் ரயில் நிலையத்தைச் சென்றடையவும். அங்கு ஒரு இனிமையான, அழகான பொறுப்பு உமக்காகக் காத்திருக்கிறது.”

எனது சித்திரவதையின் ஆரம்ப அத்தியாயத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்கப்போகிறேனோ என எண்ணியபடி பிக்காடிலி லைனில் பயணிக்கும் லன்டன் மெட்ரோ ரயிலின் தொடர்-பெட்டி ஒன்றில் அமர்ந்து, வாக்ஸ்ஹாலை நோக்கிப் பயணமானேன்.

-தொடரும்

Advertisements

One thought on “உளவுகாத்த கிளி – 1”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s