உளவுகாத்த கிளி – 10

அலுவலகம் சென்று, நான் அங்கு இருந்ததற்கான எல்லா ஆதரங்களையும் கவனமாக பொறுக்கி எடுத்து, ஒரு அட்டைப்பெட்டியில் நிரப்பினேன்.  அது நான்  நிறைவேற்ற வேண்டிய, இன்றியமையாத கடமை.

முன் அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

என் இடத்திற்கு அடுத்ததாக யார் வருவார்கள் என்பது எனக்குத் தேவை அற்ற விஷயம்.

தேவை என ஏதேனும் உருவானால், அலுவலகம் வாயிலாக செய்தியோ, கேள்வியோ வரும். 99.99% அதற்கான தேவைகளே இராது.

நான் பின்பற்றிய அனைத்து விஷயங்கள், அவற்றின் புலனாய்வு ரிப்போர்ட்கள் – ஒன்று விடாமல் எனது பாஸ் ஸின்ஹாவிற்கு  தவறாமல் தினசரி நான் அனுப்பி இருந்ததாலும், அலுவலகத்தின் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோக்காமிராக்களில் பதிவாகி இருந்த காரணத்தாலும், புதிதாய் எனது இருக்கையில் அமரப் போகிறவருக்கு நான் எதுவுமே சொல்ல வேண்டி இருக்காது.

சுமார் 1 மணி நேரத்தில் மூட்டை கட்டும் பணிகள் முடிந்தன.

என் தொலைபேசியை ஒரு முறை இறுதியாகப் பார்த்தேன். அதிலிருந்து தான் கடைசியாகத் தன்னை பல முறை வனிதா எனவும், ஒரே ஒரு முறை சிவபுண்ணியம் எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டவளுடன் பேசினேன் என்பது நினைவுக்கு வந்த்து. அவளுடன் செய்த சல்லாபங்கள் மனதை நெருடின. ஆனால், அதெல்லாம் முடிந்த கதைகள். பிடிக்கும்போது, புகையும் சிகரெட் ஸ்வாரஸ்யமாகத் தான் இருக்கும். அது தீர்ந்தவுடன், அதைக் கடாசுவது இல்பு. வனிதா ஒரு அணைந்த சிகரெட் மட்டும் தானா? கேள்வி என்னுள் ஒரு கசப்புணர்வை உருவாக்கியது. ஒரு டம்ப்ளர் தண்ணீரைக் குடித்தேன். மறக்க முயன்றேன்.  

எனது பொருட்கள் அடங்கிய அட்டைப்பெட்டியை கொரியர் மூலம் தலைமை பீடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன்.

இறுதியாக ஒரு முறை – கிண்டியில் எங்கள் கைதிகளின் நிலையை அறியச் சென்றேன். அவர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை வீடியோவில் ரெக்கார்டாகி, அதன் மொழிபெயர்ப்பு – ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஹெட் ஆஃபீஸ் சென்று விடும்.

என்னிடமுள்ள வண்டியை நான் ஸ்டார்ட் செய்யும்போது, நான் உடுத்தி இருந்த ஆடைகளைத் தவிர என்னிடம், நான் – இன்னார் எனக் கண்டறியப்பட எந்த ஆவணமும் இல்லை.

கிண்டியில் – வழக்கம்போல சங்கீதா சிற்றுண்டி விடுதி அருகே இருந்து எஸ் டி டி பூத்திலிருந்து ஒரு ஃபோன் கால். அதில் 8 வார்த்தைகள் மட்டுமே:. “அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பவிருக்கிறேன்.”

நான் செல்ல வேண்டிய இடம், அதற்கான டிக்கட், கைச்செலவுக்குப் பணம், இத்யாதியுடன் ட்ரைவர் அங்கி அணிந்த ஒருவர் டிபார்ச்சர் பகுதியில் காத்திருப்பார். ஒரு கவரை என்னிடம் கொடுத்து, சாவியைப் பெற்றுக்கொண்டு, எதுவும் பேசாமல் சென்று விடுவார். இது எங்களது செயல்பாட்டு முறை.

கிண்டி மறைவிடத்தில் அப்பாஸும் மற்ற சகாக்களும் – “பாடும்” பயங்கரவாதிப்பெண்ணின் ஆலாபனையைக் கேட்டவாறு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண்ணின் உளரல்களிலிருந்து சில வாக்கியங்கள்:

“எங்கட தமிளீளம் பகடிக்கான விடயமல்ல. அதை அடைய நாங்க எதையும் செய்வோம். ஒரு சமயத்துல இந்தியா எங்களுக்கு தோக்குகளக் குடுத்து, இயக்கவும் கற்றுத்தந்தவர்கள். ஆனால், எங்கட தலைவர் தம்பி பிரபா கேட்டது போல, எங்கட கையில ஈளத்தைக் முறையாக் குடுக்க இல்லை. மாறா அந்தக் கயவன் செயவர்த்தனவோட ஒப்பந்தத்தை ராசீவு பண்ணினவர். ஒப்பந்தத்துல ஈள மக்களுக்குப் பங்கே இல்லை. முளு இலங்கையையும் இந்தியா பாதுகாக்குமென்டு ராசீவு ஜெயவர்த்தனகிட்டச் சொன்னவர், கையொப்பமிட்டவர். அப்ப, நாங்க 30 வருஸமாப் போராடினது பகிடிக்கா? இந்தியா இந்த விடயத்துல செய்தது பெரிய பிளை! பிளைய நாங்க தட்டிக் கேட்டவர்கள். தட்டியதுக்கு இந்தியர்கள் சுட்டவர்கள். மறுபடியும் பிளை. எங்கட சகோதரிகள் பள்ளி அங்கியில இந்திய ராணுவ லொரியில பாம்ப் எறிந்தவர்கள் தான். நாங்கள் நடாத்தியது சுதந்திரத்தை அடைய கொரில்லாப் போர். அதில எப்படி வேண்டுமெண்டாலும் செயல்படலாம். ஆனால் இந்திய ராணுவத்துக்குக் கட்டுப்பாடு உண்டு. அதுல உள்ளவர்கள் பதிலுக்குச் சுடறதுக்கு முன்ன கற்பளித்தவர்கள். டொர்ச்சர் செய்தவர்கள். அதுவும் பிளை அண்டு மட்டுமல்ல, போர்க்குற்றம்! உலகம் முளுதும் எங்கடப் பொடியர்கள் பரவி இருக்கிறவர். கனக்கப் பணம் சேர்த்தவர். அது அளியாது. மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா, நியூ ஜீலாந்து, ஃபிஜி, டுபாய், வட அமெரிக்காவுல கானடா, யூ எஸ் எண்டு 28 நாடுகள்ள 650 இளுபறி பார்லிமென்ட் தொகுதிகள்ள ஈளத் தமிளன் வெட்டி-தொல்வியை முடிவு செய்ய இருக்கறவன். வெள்ளையனாகட்டும், காப்புலி ஆகட்டும், அவன்ட நாட்டுல அமைதி வேண்டுமெடால், யாரோடயும் எந்த ஒப்பந்தமும் செய்வான். ஆனபடியால மத்த வளர்ந்த நாடுகள் எங்கட ஈளத்தப் பெற்றுத் தரும். அது நிச்சயம், செல்லுபடியாகாத, செல்லரிச்சுப் போன சோவியத் ரஷ்யா சொன்னபடியால, ராசீவ் திரிகோண மலையைப் பிடிச்சு ரஷ்ய வெள்ளையனுக்கு விக்க இருந்தவர்.  அது நடக்க இல்லை, ஏனென்டால், எங்கட இயக்கத்தை மேர்க்கத்திய நாடுகள் வளி நடாத்தின, நடாத்தறவங்க, என்ன விசர்றா? ராசீவ 1991ல போட்டுத் தள்ளினதால, காங்கிரஸ் செயிச்சது. போஃபர்ஸ் ஊளல் விவகாரம் நிரந்தரமா மறைஞ்சது. அந்த பீரங்கி விடயத்துக்கும், பாகிஸ்தான் ஐ எஸ் ஐ க்கும், அதோட ஒரு முன்னாள் தலைவர்கள்ள ஒருத்தரான ஸல்மான் தாஸீருக்கும், சொனியா அம்மையாருக்கும், அவரோட அப்பர் மைனோவுக்கும், ரஷ்ய உளவு ஸ்தாபனம் கே ஜி பிக்கும், இருந்த தகாத உறவுகள் பத்தி இனி யாரும் கதைக்கப் போவதில்லை. எங்கட ஈளத்தை அடைய, பாகிஸ்தான் மட்டுமல்ல, ஐ எஸ் ஐ மட்டுமல்ல, தாலிபான் மட்டுமல்ல, ஜப்பானோட செம்படை, ஜெர்மனோட பளைய நாத்ஸியிட வாரிசுகள் , பாடர் மைந்ஹோஃப் கும்பல், , ஹாங் காங்கோட போதை மருந்து வியாபரிகள், கிளக்கு ஐரோப்பிய-அராபிய ஆயுத பேர ஆட்கள்…இப்படி யாரோடவும் பேரம் நடாத்தி செயிப்பது எங்கட உரிமை. இந்தியாவ ஒரு முறையல்ல. பல முறையும், சமூக, அரசியல், பொருளாதார, ஆயுத ரீதியாக அளித்தால் தான் ஈளம் கிடைக்குமென்டால், கிடைக்கற வர அளிப்போம். ஒரு நாட்டோட சுதந்திரப் போர் என்டால் அப்படித் தான் இருக்கும். தம்பி [பிரபாகரன்] சனவரி [18, 2009]லயே தப்பி விட்டவர். எங்கே மறைஞ்சு இருக்கிறவர் என்டு எங்களுக்கும் தெரியாது. ஆனால், அவர் எங்கட தாகமான தமிளீளத்தை மீட்டுத் தருவர் எண்டு எங்களுக்குக் கனக்க நம்பிக்கை இருக்கு!”

இந்தப் பிதற்றல்களைப் பல முறைக் கேட்டு எங்கள் போன்றோருக்குப் போர் அடிக்க ஆரம்பித்து 1 மாமாங்கம் ஆகி விட்டது.  போரில் எல்லோரும் சமம். ஒரு சாரார் வரம்பு மீறினால் பலசாலியான எதிரிகள் பல முறை மீறுவார்கள். புலிகள் என்ற பயங்கரவாதக் கும்பலிடம் ஈழம் என்ற நாட்டை ஒப்ப/டைக்க எந்த ஒழுங்கான ஜனநாயக நாடும் தயாராகப்போவதில்லை. ஒரு வேளை ஈழம் உருவானால், அதில் புலிகளுக்கு இடமே இருக்காது.

பிடிபட்ட இவர்களது கதியைப் பற்றி நான் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. ஒரு நாட்டை எதிரி எனச் சொல்லி, ஒப்புக்கொண்டு அங்கு போர் அங்கி அணியாமல் நாசவேலையில் ஈடுபட்டதால், ஜெனீவா முறைப்படை இவர்களைப் போர்க் கைதிகளாக நடத்த வேண்டிய எந்த சட்ட ரீதியான நிர்ப்பந்தமும் இந்தியாவுக்கு இல்லை.

பயங்கரவாதிகள் யாருக்கும் கருணைகாட்டுவதில்லை.

பிடிபட்ட பின், பிற நாடுகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம். மேலும், அவர்களது இயக்கத்தினர் நமது முன்னாள் பிரதமரைக் கொன்றிருக்கிறார்கள். அதற்கு யாரும் மன்னிப்புக் கேட்கவும் இல்லை. அப்படி கேட்டாலும், யாரும் வழங்கப்போவதும் இல்லை.

தோழர்களுடன் இறுதியாகக் கை குலுக்கினேன்.

விடை பெறும் முன், எங்கள் டெக்னிக்கல் டீமிந் தலைவர் எம்மானுவெல் சகாயராஜ் அவசரமாக வந்தார்.

“நாம சரியான நேரத்துல இந்த ஆயுதங்களைக் கைப்பற்றினோம். ஒவ்வொன்றும்  9,000 மீட்டர் பறந்து, 40,000 அடி உயரம் வரைப் பறக்கக்கூடியதாக இந்த ஏவுகணைக்களோட தன்மையையே மாத்தி இருக்காங்க. புலிகள் கிட்ட இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. நிச்சயமாக இதுல ஐ எஸ் ஐ வேலை இருக்கு ங்கறதுல சந்தேகமே இல்லை! கொஞ்சம் யோசிங்க. எந்தப் பயங்கரவாதி வேணும்னா, இதுகளை வெச்சிகிட்டு ஏர்போர்ட்களுக்கு வெளியே தள்ளி நின்னு, ப்ளேன் டேக் ஆஃப் ஆகும்போது ஃபைர் பண்ணி, எதுவும் நடக்காத்து போல மோடார் ஸைக்கிளில் ஏறித் தப்பிக்க முடியும். அது நடக்க அனுமதிச்சா, நாம மரமண்டைகள்! நடந்த்துக்கு அப்புறம் வருத்தப்பட்டா, முட்டாக்கூ…”

எங்களுள் பேசிக்கொள்ளும்போது கெட்ட வார்த்தைகள் சகஜமாக வெளி வரும். அவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை.”

எக்ஸைட்மென்ட் காரணமாக, சகாயராஜின் மூச்சுத் திணறியது.

“குட் வர்க், இம்மானுவேல். பாஸ் கிட்டச் சொல்லிடறேன். நீங்களும் ஒரு டீடெயில்ட் மெமொ அனுப்புங்க. இந்த ஏவுகணைகளோட டெக்னாலஜியை ப்ரேக் பண்ணி, நமக்கு யூஸ் ஆகுமான்னு பாருங்க. உங்களுக்கு வேண்டியதை ரிடெயின் பண்ணி, மத்த்தை எல்லாம் பேக் பண்ணி, தாம்பரம் ஏர்பேஸுக்கு அனுப்புங்க. அங்கிருந்து ராணுவத் தலைமை பீடத்துக்குப் போயிரும். இன்னிக்கே செஞ்சிருங்க.”

அவரிடமும் கை குலுக்கி விடை பெற்றேன்.

வண்டியைக் கிளப்பினேன்.

விமான நிலையத்தில் எனக்கு  இதை எல்லாத்தையும் விடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என அப்போது எனக்குத் தெரியாது.

-தொடரும்.

Advertisements

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

2 thoughts on “உளவுகாத்த கிளி – 10”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s