இது வரை இத்தொடரின் 5 அத்தியாயங்கள் பிரசுரமாகி விட்டன.
அதை இந்த லிங்கைத் தட்டிப் படிக்கலாம்.
அத்தியாயம் – 6
பிப்ரவரி 12 2009
எல்லா தொலைப்பேசி உரையாடல்களும் 84 முதல் பதிவு செய்யப்படுகின்றன என்ற தகவல் பலருக்குத் தெரியாது. எனக்கு அந்தத் தகவலை அமரரும் முன்னாள் டி ஜி பியும் ஆன மோஹந்தாஸ் ஸார் இரு மாமாங்கங்களுக்கு முன்பே சொல்லி இருந்தார்.
“பேச வந்தவன் பேசட்டுமே,” என்று நினைத்து மௌனம் சாதித்தேன்.
“நாளைக்கி காலைலோ 8-30 மணிக்கு உங்களே ரெணிகுண்டா ஸ்டேஷன்லோ 2-வது ப்ளாட்ஃபாரம்லோ மீட் ஒரு ஆள் பண்ண்ணும். கரெக்ட் டைம்லோ வா!”
ஃபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நான் திடீரெனக் “காணாமல் போவது” எனது அலுவலகத்தில் எல்லோருக்கும் பழக்கமான விஷயம்.
பயணங்கள் மேற்கொள்ளும்போது, எங்கள் அலுவலகத்தில், யாரும், யாரிடமும் எதையும் சொல்லிவிட்டுப் போவதில்லை. அது எங்களுடைய செயல்பாட்டின் முறை. தெரியாத விஷயங்களை யாராலும் காட்டிக்கொடுக்க முடியாது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானது தான் அது.
குறிப்பிட்ட ஆள் ஸீட்டில் இல்லாத நேரத்தில், பொதுவாக, தறை லைனுக்கு ஃபோன் கால்கள் வராமல் இருக்க, செல்வதற்கு முன் அதை எங்களது மொபைல் ஃபோனுக்கு வரும்படி ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டுச் சென்று விடுவோம்.
சிக்கலான வேலை என்றால், ஃபோனுக்கு“ஸைலன்ட் மோட்” என்ற ஃபார்முலா. பணி முடிந்த பின்னர் விட்டுப்போன, மிஸ்ட் கால்கள் அனைத்துக்கும் பதில் சொல்லுவோம். ஒரு வேளை, அலுவலக விஷயங்கள் தலைபோகிற அவசர நிலையில் இருந்தால், எங்களது கீழ் இடுப்பை அணைத்தபடி “சிலிர்க்கும் சுபாவமுள்ள” பேஜர் தகவலை அளித்து விடும்.
எனது தறை லைனில் வரும் கால்களை மொபைலுக்கு மாற்ற ஃபோனைத் தயார் செய்யும் உத்திரவு பொத்தாங்களைத் தட்டி, அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன்.
மூன்று சக்கிர வாகனத்தில் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தேன். இது போன்ற நேரங்களில் மாறு வேடம் அவசியம்.
விஷயம் புரியாத சினிமா எழுத்தாளர்களும் டைரக்டர்களும் பொய் தாடி, பொய் மீசை, விக் என்றெல்லாம் டகில் விடுவார்கள். நிஜம் வேறு மாதிரியானது.
சைதாப்பேட்டையைத் தாண்டி, கிண்டி அருகில் ஆட்டோவை நிறுத்தினேன். ட்ரைவரிடம் காப்பி சாப்பிட்டு வருவதாகக் கூறி – சங்கீதா ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தேன். “ஏதோ ஞாபகம் வந்தது போல அருகிலுள்ள ஒரு எஸ் டி டி பூத்திலிருந்து ஒரே ஒரு ஃபோன். “மா லேந்து திருப்பதியில ஒரு ஆளைப் பார்க்கப்போறேன்,” என்று கூறி ஃபோனை வைத்து, காப்பியைப் பருகி விமான நிலையம் சென்றேன். அந்த ஃபோனை யாரும் அட்டெண்ட் செய்யவில்லை. ஆனால் ஒவ்வொரு காலுக்குப் பிறகும், எனது ஏதேனும் ஒரு தோழன் அதன் பதிவு செய்யப்பட்டிருந்த குரலைக் கேட்டு, ஆவன செய்வான்/செய்வாள். “ஒரு ஆள்” என்றவுடன், தெரியாத – எதிரி என்று பொருள். உள் அர்த்தம், “மாறுவேடம் தேவை”.
அப்போது, மணி சுமார் 4.
திருப்பதிக்கு நேரடி ஃப்ளைட் எதுவும் அப்போது இல்லை. ஆனால் ஹைதராபாத் சென்றால் அங்கிருந்து உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன். இது போன்ற சம்பவங்களுக்கென அளிக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் கடன் அட்டையில் டிக்கட்களை வாங்கினேன். ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில், பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஃப்ரெடரிக் ஃபார்ஸித் எழுதிய சுய சரிதைப் புத்தகத்தை வாங்கினேன். அதில் தான் உளவாளியாகவும் தனது நாட்டுக்கு சேவை செய்த சில சூட்சுமங்களை விவரித்திருக்கிறார் அவர், என எங்கோ படித்த நினைவு. அப்போது அருகில் ஒருவர் என்னிடம் மிகவும் சாதரணமாக ஒரு சிறு லெதர் ஜோல்னாப் பையை நீட்டினார். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டேன். புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்து நடையைக்கட்டி, பாதுகாப்பு சோதனைப் பகுதிக்குள் புகுந்தேன். இது யாருமே கவனிக்காத செயல். என் கைக்கு வந்த பையில் சந்தேகப்படும்படி எதுவும் இருக்கல்லை.
ரேணிகுண்டா பகுதியில் தான் திருப்பதி விமான நிலையம் உள்ளது. அங்கு ஹைதராபாத் வழியாக, சுற்றி, போய்ச் சேரும்போது மாலை மணி 7-30. ஹாயாக நடந்து வெளியே வந்தேன். வழியில் சுத்தமாக ஜன நடமாட்டமற்ற ஒரு பகுதியில் கொண்டுவந்திருந்த தோல் பையைத் திறந்தேன். அதில் ஒரு ஒற்றை வேஷ்டி. கோடுகள் போட்ட ஒரு கால்-குழாய் ரக முட்டு வரை மறைக்கும் அண்டர்வேர். ஒரு சற்றே கிழிந்த பனியன். காமராஜர் அணிவது போன்ற ஒரு அரைக்கை ‘அசட்டு மஞ்சள்’ கலரில் ஷர்ட். அத்துடன் ஒரு துணி ஜோல்னாப் பை.
விமான நிலையத்திற்கும் ரயிலடிக்கும் உள்ள இடைவெளி சுமார் 2 கி மி. பெரும்பாலும் ஜன நடமாடில்லாத பகுதி. ஒரு பாழடைந்த மண்டபத்தின் மறைவில், எந்தச் சிக்கலும் இல்லாமல் உடை மாற்றிக் கொண்டேன். எனது ஒரிஜினல் துணிகளும் லெதர் பையும் துணி ஜோல்னாப் பைக்குள் சென்றன. முட்டி வரை நீண்ட அன்டர்வேரின் கால் பங்கு தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி, பனியனை மாட்டி, ஜிப்பா போல் தென்படும் ஷர்டினுள் உடலைப் புகுத்தினேன். ஜோல்னாப் பைக்குள் மொபைல் ஒளிந்தது. பர்ஸிலிருந்து 5 ரூ.500 நோட்டுக்களை எடுத்து சட்டைப்பைக்குள் சொருகிக்கொண்டேன். ரயிலடியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வழியில் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, ஆகியவற்றுடன் ஒரு பீடிக்கட்டையும் வத்திப்பொட்டியையும் வாங்கினேன். வெற்றிலையை மடித்து வாயில் இட்டு மெல்ல ஆரம்பித்து எந்த அவசரமும் இன்றி ரேணிகுண்டா சந்திப்பை நோக்கிப் பொடி நடை.. ஜிலுஜிலுவென்ற காற்றில் அருகிலுள்ள புழுதி முகத்திலும் உடைகளிலும் ஒட்டி அழுக்காக்கியது. வாயில் மென்று குதப்பிய வெற்றிலையின் உபயத்தில் அது சிவந்தது. அதனால் எனக்கு ஒரு நாட்டுப்புறத்தான் லுக் வந்தது. பற்ற வைத்த பீடி அதற்கு மெருகூட்டியது. நடையை மாற்றி, அதில் ஒரு வித கேனத்தனமான சப்பாணித் தனத்தை நுழைத்தேன். ரயிலடியை நெருங்கும்போது, என் தாய் பார்த்திருந்தால் கூட என்னை அடையாளம் கண்டிருக்க மாட்டாள்.
ரயிலடியில் அடுத்த நாள் நண்பகலில் செல்லவிருந்த ஏதோ ஒரு ரயிலுக்கு ஒரு 2-ஆம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கட் வாங்கினேன். அதையே காரணம் காட்டி வெயிட்டிங் ரூமில் டேரா போட்டேன். அங்குள்ள சிப்பந்திக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டை லஞ்சமாகக் கொடுத்தேன். “இது திருட்டு தம்முக்கோசம்,” என்றேன். இளித்தான். “க்வாட்டர் காவலண்டே செப்பண்டி,” என்று தண்ணியடிக்கும் ஆஃபரையும் அளித்தான். “நேனு ஷுகர் பேஷண்டு,” என்று ஒரு பொய்யைக் கூறி செட்டில் ஆவதற்குள் அங்குள்ள அழுக்கடைந்த சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஏதோ ஒரு போஸ்டர் போன்ற இரண்டு கால் பிராணியாகிவிட்டேன். அந்த அளவுக்குக் கச்சிதமான கொல்டி நாட்டுப்புரத்தான் வேடம்.
ரயிலடியில் இருந்த ஒரு பப்ளிக் பூத்திலிருந்து எனது டெல்லி தலைமை ஆஃபீஸுக்கு ஒரே ஒரு ஃபோன். அதை யாரும் எடுக்கவில்லை.அது நான் இருக்கும் இடத்தைக் குறிக்கும் ஒரு ஸிக்னல். அடுத்த 20-ஆவது நிமிடத்தில் தக்கபடி மாறுவேடத்தில் படைகள் வந்தன. மாறுவேடம் என்ற சொல் கன்ஃபியூஸ் பண்ணும். போலி ரயில்வே ப்ரொடக்ஷன் ஃபோர்ஸ் அங்கியில் சிலர். ரேப்பிட் ஆக்சன் ஃபோர்ஸ் அங்கியில் சிலர். மொத்தம் 12 பேர். ரயிலடிக்கு உள்ளேயும், வெளியேயும். தயார் நிலையில் ஒரு இரும்புக் கவச வண்டி., எவனுக்கும் சந்தேகமே வராத வண்ணம் நின்றது. இப்போது பல ரயிலடிகளில் இது போன்ற வண்டிகள் நிற்பது எல்லோருக்கும் பழக்கமாகி விட்டது. இந்தியாவிலேயே மிகவும் சோம்பேரியான கும்பல் என ஒன்று உண்டென்றால், அது ஆர் பி எஃப் என்ற ரயில்வே பாதுகாப்புப்படை. ரேணிகுண்டாவில் 3 நபர்கள்மட்டுமே அஃபீஷியலாக இருந்தார்கள். மூவரும் காவல் துறை அறையில் ரம்மி ஆடுவதில் மும்முரமாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில் ரெயில்வே எப்போதோ ஃபெயில்வே ஆகி விட்டிருந்தது. யார் எக்கேடுகெட்டாலும் அவர்களுக்குக் கவலை இல்லை.
ரயில் நிலயத்தில் டீ சாப்பிடும் பாசாங்குகளின்போது தேட வேண்டிய அல்லது கவனிக்க வேண்டிய ஆள் எப்படி இருக்கலாம் என எனது தோழர்களிடம் டிஸ்கஸ் பண்ணினேன். என்னைக் காண வரும் நபர் யாராக இருக்கலாம் என்ற கணக்கை எனது பாஸ்கள் ஏற்கனவே கணக்கிட்டிருந்தனர். மிகவும் அலர்ட்டாக, ரயில் நிலையத்தை சல்லடைபோட ஆரம்பித்தோம். விசேஷப் பயிற்சி இல்லாத அமெச்சூர் உளவாளிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அருகிலுள்ள ஏதேனும் கண்ணாடியில் உற்று தலையைச் சீவிக்கொள்வது போல நடித்து, பின் தொடர்வோரைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். சந்தேகம் வந்த நபர்களிடம் பேச்சுக் கொடுக்க எத்தனிப்பார்கள். கூட்டாளிகளுக்கு காதைச் சொறிந்தோ, மூக்கை உருவியோ சைகைகள் செய்வார்கள். கொஞ்சம் புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள் கண்களால் சைகைகள் ஸிக்னல் கொடுப்பார்கள்.
இது போன்ற எந்தச் சம்பவமும், இரவு முழுதும் அங்கு நடக்கவில்லை.
அது எங்களைப் பொறுத்தவரை சிவராத்திரி ஆயிற்று. கண் விழித்தோம்.
இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமான விஷயங்கள். 72 மணி நேரம் மிகவும் உஷார் நிலையில் விழித்திருக்க, எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரும் மக்கள் வெள்ளம் காரணத்தால் எப்போதுமே ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஜன நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
புனித யாத்ரிகள் மடிய நாம் காரணமாக இருக்கக் கூடாதே என்று ஏழு மலையானை வேண்டிக் கொண்டேன்.
-தொடரும்
2 thoughts on “உளவுகாத்தகிளி – 6”