மஹாகவி பாரதியின் மரணம், ஒரு ஃப்ளாஷ்பேக்

மஹாகவி பாரதிக்கும் இந்த மண்ணாங்கட்டிக்கும் முக்கால் நூற்றாண்டைத் தாண்டி, ஏழ்மையை மட்டுமே நூலிழையாகக் கொண்ட ஒரு உறவு உண்டு. அதில் பலர் அறியாத ஒரு உண்மை புதைந்துள்ளது.

எனக்குச் சிரிப்பதா, அழுவதா எனக் குழப்பமும் சந்தேகமும் 80களில் துவங்கி, 90களில் ஆழத்தைப் பெற்று, 2006ல் அற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்பும், ஒரு நெருடல் மட்டும் இன்றும் என்னை நிழலாய்த் தொடர்கிறது.

செப்டம்பர் 20 1981

அது நான் பத்திரிக்கை உலகில் காலைப் பதிக்கக் கற்றுக்கொண்டிருந்த காலம்.

பொதுவாக, பத்திரிகை அலுவலகங்களில் எழுதிக் கொடுத்தக் கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் – ஒருவர் சம்பளம் வாங்கும் சிப்பந்தியாக இல்லாத பட்சத்தில் – எப்போதாவது தான் “சில்லறை ஆசிகள்” கிடைக்கும்.

நான், நிரந்தரமான சில்லறைத் தட்டுப்பாடுள்ள ரகம்.

தேவைக்கு சற்றே அதிகமாகத் தொழில் தெரிந்த என்னை பணியில் அமர்த்துவதில் பலருக்கு சிக்கல்.

தாய் தந்தையுடன் வசித்தும் எனக்கு சில நேரத்தில் சிகரெட்டுக் கூடக் காசில்லாத் நிலை இருந்ததுண்டு.

அவ்வப்போது நண்பர்களிடம் கடன் கேட்பேன்.

கொடுப்பார்கள்.

கொத்தவால் சாவடி அருகில் வியாபாரம் செய்து வந்த ஒரு மார்வாடி நண்பரிடம் கைமாத்தாக ரூ 500ஐப் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

மதியம் மணி 1-37.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது.

ஆனால், எனது நண்பர், கடன் தந்திருந்ததால், பாக்கெட் ஃபுல், மனம் ஜில்!

லோன் ஸ்க்வையர் அருகே அமைந்திருந்த பூங்காவின் வாயில் ஓரத்தில் நின்றபடி, ஆடு திருடியது போல விழித்தபடி, ஒருவன் கஞ்சாப் பொட்டலங்களை விற்றுக் கொண்டிருந்தான்.

அந்த நபர் பெரிதாக யாரையும் அஞ்சுவதாக எனக்குத் தோன்றவில்லை.

சற்றுத் தொலைவில், சுமார் 70 வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர், குடி போதையில், மிகவும் வித்தியாசமான முறையில், லாகிரிப் பொருள் பரிவர்த்தனை செய்துகொண்டிருந்த நச்சு வியாபாரியை உரக்க வைது கொண்டிருந்தார்.

“எலே…நீ பொறந்தது அப்பனுக்கில்லடா, சண்டாளப்பயலே… உன்னப் பெத்தவன் உனக்குச் சித்தப்பன் மொறன்னு தெரியுமாடா! அந்த மொற கூட உங்க வீட்டுல எந்த விருந்தாளியால ஏற்பட்டதுன்னு உங்க அம்மாளுக்குத் தெரியாதுடா நாதாரிப் பய மவனே! கொஞ்சம் தேடி விசாரிச்சுப் பாத்தீன்னா உங்க அம்மா உனக்கு ஒரு விதத்துல சித்தி, ரெண்டாவது விதத்துல அத்தை மொறன்னு தெரிஞ்சுத் தொலைக்கும்! நீ பொறந்தது குடும்பத்துல இல்லடா களவாணிப் பயலே…அது விபச்சார பஜாரோட கேடுகெட்ட எல்லைக்கோடு!”

எனது காதுகள் கிட்டத்தட்ட வெந்து விட்டன என்றாலும், அவரது அச்சேறக்கூடிய கெட்ட வார்த்தைகளை நின்று ரசித்தேன்

இன்று கூட அச்செயலை அன்று நான் ஏன் செய்தேன் எனக்குப் புரியவில்லை.

அவரது அருகில் சென்றேன்.

“அய்யா!”

“என்னடா கொய்யா?”

“உங்களுக்கு ஏதோ தாகம்னு தெரியுது. அந்தத் தாகத்துல வர்ற கெட்ட வார்த்தைங்க… எனக்குள்ள… அதை தீர்த்து வெக்கற சாக்குல அதுங்களோட ஊற்றுக் கண் எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கற தாக்கத்த உண்டு பண்ணிரிச்சி. உங்களுக்கு தாக சாந்தி பண்ணினா, எனக்கு தாக்க சாந்தி கிடைக்கும்னு தோணுது,” என்றேன்.

“தொண்டக்குளியில வறட்சி…போதை பத்தாததால தளர்ச்சி…மனசுல கிளர்ச்சி! உதவி பண்ணினா, உனக்கு உண்டு மகிள்ச்சி!”

டி. ராஜேந்தர் கணக்கா அவர் சொன்ன டயலாக் இன்னமும் அதிகமாக என்னைப் பாதித்தது!

“நீ என்னோட வேதனையக் குறச்சா…நீ சாதனை பண்ணற மாதிரி சிந்தனைச் சீதனத்தத் அள்ளிக் குடுப்பேன்!”

அக்காலத்தில் விசுவின் ரிலீஸாகியிருந்த மோடி மஸ்தான் என்ற நாடகத்தின் டயலாக் ஞாபகத்திற்கு வந்தது.

“என் மூஞ்சிக்கு எதுக்கு சாதனையும் சொதனையும்?”

அடுத்த 4 நிமிடங்களுக்குள் “பெரிசு” குஜாலாகிவிட்டது.

நான் அவருக்கு “என்னென்ன வேண்டுமோ”, வாங்கிக் கொடுத்திருந்தேன்.

“குடி குடியைக் கெடுக்கும்னு மொட்டையா அரசாங்கம் போர்டு வெச்சது தப்பு தம்பி! ஒரு சில குடிய மட்டும் தான் கெடுக்கும்னு ஒளுங்காச் சொல்லியிருக்கணும்! சாராயம் விக்கறவன் குடியை அது வாள வெக்கிது..அத்தக் கள்ளத் தனமாத் தயாரிக்கிறவன அது அரசியல்வாதியாக்கி எம்.எல்.ஏ. ஆக்குது…. நல்ல தனமாத் தயாரிக்கத் தெரிஞ்சுக்கிடறவன மந்திரியாக்குது…உன்ன மாதிரி ஆள, தானம் பண்ணற பிரபுவாக்குது…வெளியே மொளகா பஜ்ஜி விக்கறவன் ரப்பர் வவுத்த ரொப்ப சூப்பர் சில்லறையக் குடுக்குது…என்ன, என்னைய மாதிரி ஏமாளியோட ஏற்கனவே கெட்ட குடியை மட்டும் தான் மேலும் கெடுக்குது … ஆனா அது பரவா இல்ல … ஏன்னு கேளு!”

“ஏன்”

“குறுக்கப் பேசாத! கொளம்ப்போயிருவேன்.”

“நீங்க ஒரு சின்ன உதவி பண்ணணும்.”

“இந்தச் சாராயக் கடை பில்லக் குடுக்கறதத் தவிர…எந்த வரத்தைக் கேட்டாலும் இந்த ஆசாமி சாமிக் கணக்கா ஆசியா வளங்கித் தள்ளுவான்!”

“அந்த கஞ்சா விக்கறவன எதுக்கு அப்படி கெட்ட வார்த்தையில திட்டினீங்க?”

 “நீ மற களண்ட கேஸா? இல்ல, அப்பன், பாட்டன், முப்பாட்டன் சம்பாரிச்சக் காசைக் கரியாக்கற கிறுக்குப் பயலா?”

“இரண்டுமே இல்ல.”

“லாட்ட்ரியிலயோ, மூணு சீட்டுலயோ திடீர்னு துட்டு கெலிச்சியா?”

எப்பவாவது சூதாடினால் பணத்தைத் தோற்றே பழக்கமுள்ள எனக்குச் சிரிப்பு வந்தது.

“இல்ல!”

“பின்ன ஏன், முன்னப்பின்னத் தெரியாத நாசமாப் பொன குடிகாரக் கிளவன் மேல உனக்கு இவ்வளவு கரிசனம்?”

ஒரு வழியா…7 மில்லியுடன் 8 மிளகாய் பஜ்ஜிகளை உள்ளே தள்ளிய மனிதர் பெரிதாக ஒரு ஏப்பம் விட்டார்.

“கண்டக் கண்ட உயர் சாதி அறிவிலிங்க…செத்துப் போன எவனுக்கெல்லாமோ சோத்தைப் போடறேன் பேர்விளின்னு ஏற்கனவே ரெண்டு சாத்தத்த சாப்பிட்ட பாப்பானுக்கு மூணாவது மொறையா சோத்தப் போட்டு, அத்த அவங்க இலையில வேஸ்டு பண்ணறதுக்காவ … துட்ட வேற குடுத்து … அளுகுறானுங்க!”

எனது நினைவுகள் பத்து வருடங்கள் பின்னோக்கிப் போயின.

ஜாதிகள் இல்லையடி பாப்பா, என்னு பாரதி சொன்னதுக்கும், இந்தக் குடிகாரன் உளருவதற்கும் ஒரு தொடர்புண்டு என அவரது பேச்சு, அடுத்த சில நிமிடங்களில் என்னை உணரச்செய்து, ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியது.

ஏப்ரல் 22 1971

“இன்னிக்கு நல்ல முகூர்த்த நாளோன்னோ! அதுனால…பிரம்மணா அகப்படல்ல. பிரணதார்த்திஹர அய்யர் ஆத்துல கார்த்தால டிப்பனா ஒரு சிராத்தத்த சாப்பிட்ட ராமகிருஷ்ணனும், சிவராமனும் தான் கிடச்சா … அதுனால அவசரப்படாம … மெதுவா சமையல் பண்ணினாப் போதும் மாமி. பிராம்மணாள் ஒழுங்கா, வயிறு நிறையச் சாப்பிட்டாத் தான் அவா குடுக்கற ஆசீர்வாதம் பலிக்கும்!”

“லட்சுமி மாமியோட மணக்கற சமையல்ங்கற ஒரே காரணத்துனால உங்காத்துக்குன்னா பிராம்மணாள் கிடச்சுருவா … குறிப்பாச் சொன்னா … நான் அதுக்காகத் தான் உங்காத்துக்கு வந்தே ஆகணும்னு உங்காத்துல உபாத்யாயம் பண்ணற …”

சிரார்த்தம்னா ஒரே வேளைதான் சாப்பிடணும்னு சொல்லுவாளாமே, வாத்தியார் மாமா?

நான் ஒவ்வொரு ஆண்டும் இப்படி எதையாவது கேட்டுத் தொலைப்பதுண்டு.

“புலிக்கு பூனை பேரனாப் பொறந்ததில்லன்னு ஒரு புது மொழியுண்டு! சாஸ்திர சிரேஷ்டர் பட்டாசு வெங்கடாசலய்யரோட பேரனுக்கு சகலமும் தெரிஞ்சிருக்கறதுல ஆச்சிர்யமே இல்ல! மார்னிங்ல ராமகிருஷ்ணன் பிரணதார்த்தி அண்ணாவாத்துல விஸ்வேதேவராகவும், சிவராமன் அவரோட அம்மாவாகவும் ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சா … இங்க… ராமகிருஷ்ணன்… உங்காத்துல உங்களோட ஸ்வர்க்கத்து மாமியார் … சிவராமன் தான் விஸ்வேதேவர் … அந்த ரெண்டு பேரோட நல்லாத்மாக்கள் புண்ணியத்துல இவா இன்னிக்கு லஞ்ச்சையும் முடிச்சுக்கறா … இந்தக் காலத்துல ஏழைப் பிராம்மணாள் இப்படி எப்பவாவது வயிறு நிறையச் சாப்பிட்டாத்தான் உண்டு … மத்த நாள்ள இவா ஆத்துல எல்லாம் அடுப்புக்குமேல பூனை செரட்டையை தறையில தேக்கற சத்தத்தவிட உரக்க கொரட்ட விட்டூண்டு தூங்கும். ஆனாப் பாரு அம்பி … ஸ்ராத்த மந்திரத்துல – அஹோ ராத்ரௌ க்ஷுதன ந பவேத்னு தான் பெரியவா சொல்லியிருக்கா … அதாவது சிராத்தம் சாப்பிட்டதுக்கு அப்புறம் ரத்திரி தான் சாப்பிடப்படாது. கார்த்தால டிப்பனா ஒரு சிராத்தம் சாப்பிடத் தடைன்னு எந்த சாஸ்திரத்துலயும் சொல்லல்ல தெரியுமோ!”

ஒவ்வொரு வருடமும், ஒருவர் மறைந்த தாய் தந்தையருக்கு ஸ்ரார்த்தம் செய்யும்போது, எந்த லோகத்திலிருந்தாலும், அந்த ஆன்மாக்கள் பூமிக்கு வந்து உணவு உண்பதாக நம்பப்படுகிறது.

பல லோகங்கள் உள்ளன என ஹிந்து சமய நம்பிக்கைகள் சொல்வதுண்டு.

வெகு தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளதால், துணைக்கு, “விஸ்வேதேவர்” என்ற பேச்சுத் துணையுடன் குறிப்பிட்ட ஆன்மா பூமிக்கு வருவதாக ஐதீகம்.

மேலும், வானுலகக் கணக்கில் – நமது ஒரு வருடம் – அங்கு ஒரு நாள்.

ஸ்ரார்த்தம் நடக்கும்போது … இரு அந்தணர்களுக்கு இதற்காக உணவு படைக்கப்படுகையில் … அந்தச் சடங்கு ஒழுங்காக, பத்திரமாக நடத்த, [அதாவது வேறேதோ லோகத்துலேந்து உணவருந்த வந்த புண்ணிய ஆன்மாக்கள் நிம்மதியாக தொந்தரவின்றி உண்டு திரும்பிச் செல்கிற வரை] மஹாவிஷ்ணு அந்தச் சடங்கை காக்கும் பொருட்டு பிரத்தியட்சமாக அவ்விடத்தில் இருப்பதற்கு அடையாளமாக, சிராத்த சம்ரக்ஷகரான அவருக்கும் ஒரு இலையில் உணவு பரிமாறப்பட்டு, அதனை அந்த வீட்டு கோத்திரத்தோடு சேராத ஒருவருக்குப் படைத்து, தட்சிணையும் கொடுப்பது வழக்கம்.

முன்னொரு காலத்தில், முனிவர் ஞானேசுவரர் என்ற மகான் இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தில், சன்னியாசம் பெற்ற ஒருவருக்குப் பிறந்ததால் … அவரது மறைந்த தாய்தந்தையருக்குச் சிரார்த்தம் செய்ய ஊரிலுள்ள எந்த அந்தணரும் வராதபோது … அதனைப் பொருட்படுத்தாத அந்த மஹான், யாரும் எதிர்ப்பாராத விதத்தில், தனது 3 தலைமுறைக்கான மூதாதையர்களையே  நேரிலேயே வரவழைத்து உண்ணச் செய்தார் எனவும், அதனைக் காண கண்ணபிரான் சகல ஆயுதங்களுடன் நின்று, பாதுகாத்து, தானும் உண்டு தட்சிணை பெற்றுச் சென்றதாக சரித்திர ஆதாரங்கள் அம்மாநிலத்தில் உள்ளதாக இன்றும் பலரால் நம்பப்படுகிறது.

சன்னியாசம் என விதண்டாவாதம் செய்த பணப்பித்துப் பிடித்த அந்தணர்களின் கர்வத்தை ஞானேசுவரர்ரும் கண்ணபிரானுமாக அடக்கியதாக இன்றும் சொல்வோருண்டு.

காண்டாமிருகம் சைஸ்ல இருக்கற உங்கள கனபாடிகள்னு சொல்லறதுக்குப் பதிலா, கனbodyகள்னு சொன்னாப் பொருத்தம், மாமா!

“உங்காத்துப் புள்ளைக்குத் திமிரும் வாய்க் கொழுப்பும் கூடவே பொறந்திருக்கு!”

திமிரும் வாய்க்கொழுப்பும் இருந்தாத் தப்பில்ல வாத்தியார் மாமா! சாஸ்திரத்தை சொந்தத் தேவைகளுக்காகத் திரிச்சு, தப்பாக்கி சம்பாதிக்கறதுனால நம்ம ஸனாதன தர்மத்துக்கே கெட்ட பெயர உண்டு பண்ணறேளே … அது தான் தப்பு!

நாய் ஒரு காலைத் தூக்கி மூத்திரம் போவதுபோல “அவிசக் குசு விசுவனாத கனபாடிகள்” மடங்கிய தனது அரை டன் தொடையைத் தூக்கி பெரிதாக ஒரு கீழ் ஏப்பம் விட்டு, இதற்கான தனது எதிர்ப்பைத் தெரிவித்து விடுவதுண்டு!

பழைய ஞாபகத்தில் இளித்தேன்.

செப்டம்பர் 20 1981

“நீ மற களண்ட கேஸே தான்! தனியாச் சிரிச்சுக்கற!”

“தவறுகள உணர்ந்து அதுகளைத் திருத்தற எண்ணத்தோட தன்னையே ஜோக்காக்கிச் சிரிக்காதவன், பிற்காலத்துல மத்தவங்களோட ஏளனப்பொருளாயி சீப்படுவான்னு ஒரு ஆங்கிலப் பழமொழியுண்டு அய்யா!”

“ஒரு வேளை உன்னோட தவறு சிரிக்கற மாதிரி இருக்கோ என்னவோ…ஆனா…என்னோட தாத்தா பண்ணின தவற நெனச்சு அளுகை வர்றப்ப எல்லாம் … குடிச்சிருவேன் … அப்போ ஏதாவது களவாணிப்பய கஞ்சா விக்கறதப் பார்த்தா, திட்டித் தீர்த்துருவேன்!” நல்ல வேளை…பெரியவர் தானாகவே மேட்டருக்கு வந்து விட்டார்.

“அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை … நீங்க திட்டறது கூட ஒரு விதத்துல ஒரு வினோதமான வக்கணையோட கேட்டிச்சி!”

“பாரதத்தோட எளுத்துக்கு என்னோட தாத்தாக் கெளவன் பண்ணின துரோவத்துக்கு மன்னிப்பே இல்ல!”

“அப்படி என்ன பண்ணிட்டாரு?”

ஆகஸ்டு 15 1921

தி ஹின்டு பத்திரிக்கையை ஆரம்பித்த, பறங்கியர்களால் “திருவல்லிக்கேணித் திருகுவலி ஆறு நபர்க் கும்பல் தலைவர்” எனத் தூற்றப்பட்ட ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் என்ற தேசபக்தி ஏட்டை 1881ல் – அதாவது பிற்காலத்தில் மஹாகவி என வருணிக்கப்படவிருக்கும் பாரதி பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு – ஆரம்பித்திருந்தார்.

கடையத்தில் கவிதை எழுதிக் குடும்பச் செலவுகளை ஒழுங்காக நிறைவேற்ற முடியாத பாரதிக்கு 1920ல் சுதேசமித்திரன் பத்திரிக்கை அழைப்பு அனுப்பியிருந்தது.

அக்காலத்தில் மெட்ராஸ் பட்டணமாக இருந்த சென்னைக்கு வந்த பாரதி … தனக்கே உரிய பாணியில்…வெறும் வயற்றின் வெதும்பல்களின் காரணத்தால் … அனல் பறக்கும் தனது கதை, கவிதை, கட்டுரைகளை எழுதும் பழக்கத்த்தை அப்பத்திரிக்கையிலும் தொடர்ந்தார்.

முந்தினம், வழக்கம்போல வீட்டிலுள்ள அரிசியை குருவிகளுக்கும், காக்காய்களுக்கும் தானம் செய்திருந்ததால், காலையில், தனது திருவல்லிக்கேணி வீட்டில் பச்சைத் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு அலுவலகம் வந்திருந்தார் பாரதி.

“இன்றைக்கு … தங்கசாலையில … ஒரு கூட்டம் … நம்ம சுதந்திர எண்ணங்கள் பற்றி … கொஞ்சம் எங்க எல்லாருக்கும் நீங்க தான் விளக்கணும்!”

வந்த நபரை கவனித்த பாரதி … மனிதரிடம் கொஞ்சம் பசை இருக்கிறது … பணமும் இருக்கலாம். இரவில் கூட்டம் பேசி முடிக்கும்போது…சில்லறைத் தட்சிணைகள் உண்டோ இல்லையோ, நிச்சயமாக உணவு இருக்கும் எனக் கணக்கிட்டார்.

“வருகிறேன்!”

மாலையில், லாந்தர் விளக்கின் ஒளியில் மக்கள் பாரதியின் முகத்தில் தெரிந்த சிவந்த அனலை … அவரது வீரத்தின் சின்னமாகக் கருதினார்கள்.

“பாரதத்தின் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் … தமது சிறுனீராலும் உமிழ் நீராலும் உருவாக்கிய கழிசடைக் கால் நடைகள் போன்ற பொருட்களென அன்னியர்கள் வருணித்துக் கொக்கரிக்கிறார்கள் … அவை நமது மூதாதையர்கள் தமது உழைப்பால், சென்னீரை உப்புக்கரிக்கும் வியர்வையக்கி, வாயையும் வயிற்றையும் கட்டி, உண்ண வேண்டிய உணவைச் சுண்ணாம்பாக்கி செங்கற்களுக்கிடையில் சொருகி நிர்மாணித்த…”

வீரக் கவிஞர் பார்தி!

வாழ்க வாழ்க!

சுதந்திரத்தின் விடிவெள்ளி பாரதி!

வாழ்க, வாழ்க!

பறங்கியனின் சிம்ம சொப்பனம் பாரதி!

வாழ்க, வாழ்க!

பசி தனது மேனியைத் துடிக்கச் செய்து … வேதனை ஊட்டியதையும் மறந்த பாரதி … வீரத்தை வார்த்தைகளாக விதைத்துக் கொண்டிருந்தார்.

உண்ணாததால் ஏற்படவிருக்கும் மயக்கம் அவரை என்னவோ செய்தது.

மானமுள்ள அந்தக் கவிஞன், தனது சொற்பொழிவைச் சுருக்கி, முடித்துக் கொண்டார்.

அவரது தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடக் கேட்கத் தோன்றாத அவரது “தேசபக்த” ரசிகர்கள், தட்டிக் கொண்டு, கும்பிட்டுக் கிளம்பிவிட்டனர்.

பசி மயக்கத்தால் கண்கள் இருண்டுகட்டிக் கொண்டு வந்த இறுக்கத்தினாலும், தனது ஏழ்மையின் கொடுமையினாலும் பெருகிய கண்ணீர் மழையை எவனும் காணாத வண்ணம் இருள் ஒரு போர்வையாய் உதவி தனது மானத்தைக் காத்தமைக்கு நன்றியினை முணுமுணுத்தவாறு அந்த ஏழைக் கவிஞர் வீட்டை நோக்கி நடக்கலானார்.

லோன் ஸ்க்வயர் அருகே … மயக்கம் அதிகமாகிய நிலையில், இருளில் ஒரு கல்லில் தடுக்கி விழவிருந்த அவரை, தெருவோரம் அமர்ந்திருந்த ஒருவன் தாங்கிப் பிடித்தான்.

“கறுப்புக் கோட்டுப் போட்ட ஆளுங்க கள் போட்டுக் கால் தடுமாறுவாங்கன்னு ஸொன்னது ஸர்தான், போல!”

“எனது தள்ளாட்டத்தின் காரணம்… போதை போகத்தின் மோகம் அல்ல, பசிப்பிணி!”

“புரியும்படியா ஸொல்லு நயினா!”

“பசி வந்தால் … பத்தும் பறந்து போகும்!”

“பத்தோட ஏன்பா நிறுத்திக்கின? பத்தோட பதினொண்ண ஸேரு … இருவத்தொண்ணக் கூட்டு … நாப்பத்தொண்ணப் பெருக்கு … பத்தொன்பதைக் களி!”

 “அலை பாயும் உன் எண்ணங்களின் ஏகடியம், உமது எண்களுக்கு அழகூட்டுகிறது அய்யா!”

 “ஸுருக்கமா ஸொன்னாக்கா … வவுத்துல பஸி ஸதிர்க் கச்சேசி ஸெய்து … நீ ரொட்டுல குத்தாட்டம் போடற!”

ப்ராட்வேயின் அந்தப் பகுதியில் இருந்த ஒரே தெருவிளக்கொளியில், அந்த நையாண்டியை ரசித்து, ஆமோதித்தவாறு பாரதி தலை அசைத்தது அந்தப் பெரியவரின் கண்களுக்குத் தெரிந்தது.

 “இந்தாய்யா…என்னால் உன்னோட பஸியப் போக்க முடியாது … ஆனாக்க ஒரு மேட்டரு கீது. இத்த இஸ்துகினே தான் ஸாமிங்க கைலாயத்துல குளூர் பாதிப்பு இல்லாம ஸொகமா கீது … எந்த ஸாமியாவது ஸோறு ஸாப்பிடற மாத்ரி படம் கீதா? ஏன்னு கேளு … அவன் அல்லாம் … இத்த இஸ்துகினு கீறான் … பஸி வரதில்ல! இது பஸியை பஞ்சாப் பறக்க உட்ரும்…. துக்கத்தைத் தூரத்துக்கு வெரட்டிரும்…. தெம்ப வரவளைக்கும். அப்பால அது அல்லாம் மறுபடியும் ஸேர்ந்து வர ஸொல்லொ … துட்டு இல்லாங்காட்டி … இத்த இன்னொரு தபா இஸ்தா அப்போதைக்கு மறுபடியும் அல்லாம் ஸரியான மாத்ரி ஃபீலிங் இருக்கும்!”

 கஞ்சா நிறைந்த ஒரு புகையும் குழாயை நீட்டினார் அந்தப் பெரியவர்.

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்!”

 குரள் எண் 109 ஐக் கூறி, பாரதி அந்தப் பகைப் புகையை வாய் வழியாக நுகர்ந்தவாறே நகர்ந்தார்.

 இரவில் இருளில் அவர் வீட்டுக்குத் தள்ளாடியபடி, பாடியபடி வந்து சேர்ந்தபோது … அவரது மனைவி செல்லம்மாள் தவித்துப் போனார்.

 “இதென்னது கையில கும்மட்டி? புகையோட நாற்றம் குடலைப் பிடுங்கறதே!”

 “புகை உடலுக்குப் பகை வகை என்றால், இறை இதனைப் படைத்தது பிழையா செல்லம்மா? சொல்லம்மா!”

 “நான் என்னத்தக் கண்டேன்?”

 “பசியால், பட்டினி விரதங்களால் புண்ணியம் மட்டுமல்ல … வயற்றுக்குப் புண்ணும், மான உணர்வுக்கு பங்கமும் ஈயப்படும், செல்லம்மா!”

“போய்ப் படுங்கோ!”

அவரைச் செல்லம்மா அன்று கண்டித்திருந்தால், அந்தப் பழக்கம் அவரை அதற்கு அடிமை ஆக்கியிருக்காதோ என்னவோ. ஆனால், அது ஒரு பெரும் விபத்தில் அவரைக் கொண்டுபோய்ச் சேர்க்கவிருக்கிறது என்ற விஷயத்தை யாரும் அன்று உணரவில்லை.

செப்டம்பர் 11 1921

வணங்கும் எல்லோர் தலையிலும் துதிக்கை வைக்க தனது செல்லப் பிராணிக்குக் கற்றுக்கொடுத்து, அதனை பிறரது பக்தியைத் தவறாகப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்து … அதில் தனது குடும்பத்தின் வயிற்றைக் கழுவி…மிச்சம் மீதி இருந்தால்…அந்த மிருகத்திற்கும் யானைப் பாகர்கள் உணவு படைப்பர்கள்.

குறிப்பாக, கோவில் யானைகள் இதற்காகவே அக்காலத்திலும் பயன்பட்டன … இக்காலத்திலும் படுகின்றன.

அன்று பார்த்தசாரதி கோவிலில் யானை வழக்கத்தை விட அதிகமாகப் பிளிறிக்கொண்டிருந்தது.

“ஏன்டா…வேலு? யனைக்கு போஜனம் கொடுக்கலியோ?”

பெரிதாக நெற்றியில் நாமமிடப்பட்டிருந்த யானைக்கு, வழக்கமாக அங்கு கும்பிடும் ஆராவமுதன் அய்யங்கார் பிரசாதத்தட்டிலிருந்து பழங்களை வழங்கியவாறு கேட்டார்.

 “ஸாமி எந்துகொண்டு அங்ஙனெ சோதிச்சு?”

“வழக்கமா இந்த யானை பழங்கள மெதுவாத் தான் வாங்கிச் சாப்பிடும். இன்னிக்கு பிடிங்கின்னா திங்கறது?”

இரண்டு நாட்களாக அதற்கு சரியான உணவு படைக்க தன்னிடம் பணமில்லாதற்கான காரணம் – யானை சம்பாதித்த பணத்தை எல்லாம், அடகு வைக்கப்பட்ட வீட்டின் பத்திரத்திற்கான வட்டி கட்ட திருவதாங்கூர் சமஸ்தான எல்லையில் அமைந்துள்ள காயங்குளம் என்ற ஊரில் வசிக்கும் தனது மனைவி பெயருக்கு மணி ஆர்டர் செய்து, தான் யானையின் வயற்றில் அடித்த விஷயத்தை ஒப்புக் கொள்ள விரும்பாத கொச்சுண்ணி வேலு, “அதுன விசேஷிச்சு ஒன்னுமில்லெங்கிலும் … கொறச்சு சகமில்லா…” என மழுப்பினான்.

கஞ்சாவின் போதையில் கோவிலுக்குள் நுழைந்த பாரதி, தனது நண்பியான லாவண்யா என்ற அந்தப் பெண் யானையின் அருகில் வந்தார்.

“எமது பசி ஏக்கத்தின் விக்கல்களை விண்டு விள்ளலாக்கி, உம்மை யாமேயாக்கி, நீர் புசிக்க விருந்தாக்குகிறோம், யானாய் யானின் எழுத்தாய்!”

மிகவும் சாதுவாகவே அறியப்பட்ட, அன்று பசி மயக்கத்தில் இருந்த அந்தப் பெண் யானை லாவண்யா, தள்ளாடியபடி வந்த பாரதியைக் கண்டு மிரண்டாள்.

துதிக்கையை உயர்த்தி அவரைச் சுருட்டித் தூக்கி…

செப்டம்பர் 20 1981

“என் தாத்தா அந்தக் கவிஞருக்கு ஒதவறதாக நெனச்சு ஒதச்சுப்புட்டாரு! யானை தூக்கி எறிஞ்சதுனால – பாவம் பாரதி அப்பால செத்திட்டாரு. பல வர்ஸம் களிச்சு என் தாத்தா சாவறதுக்கு கொஞ்ச நாளு முன்னால, கஞ்சா போதையை சாவுக்கான சாவியா குடுத்தது பாரதிக்குன்னு தெரிஞ்சு, நெனச்சு, பொலம்பிக்கினே அந்த கஞ்சாப் போதைப் பளக்கத்தை வுட்டாரு!”

விரக்தியுடன் அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகளை நான் மௌனமாகக் கேட்டென்.

“அந்தப் பெரிய மனிஸரோட பஸியை மட்டும் எங்க தாத்தா கொல்லல்ல…அவரையே கொன்னுட்டாரு! அந்த மஹாகவி எளுதின கவிதைகளை அவருக்கு அப்பால கண்டக் கண்டவனுவ வித்துக் கோடீஸ்வரங்க ஆனானுவ. பாரதி பட்டினியில துடிச்சி, அந்தத் துடிப்ப மறக்க அந்தப் பகைப் பொகை போதையில… யானையினால செத்தாரு … இன்னிக்கு அந்த மவானோட குடும்பம் நல்லா இருக்கா இல்லியான்னு தெரியாதுபா … ஆனாக்க … அந்த நல்ல மன்ஸன கொண்ண பாவத்துனால எங்க குடும்பம் நல்லா இல்ல! நான் மட்டுமில்ல … எங்க ஊட்ல அல்லாருமே போதைக்கு அடிமை … ஆனா … கஞ்சா மட்டும் அடிக்கறதில்ல! அத்த விக்கறவனப் பார்த்தா, பத்திகிட்டு வரும்!”

அக்டோபர் 10 1981

“ஃபிலிப் தாம்ஸ் இருக்காரா?”

வைட்ஸ் ரோட்டிலுள்ள சுதேசமித்திரன் பத்திரிக்கை அலுவலகத்தில் யாரிடமோ தொலைபேசியில் சுவாரஸ்யமாகப் பேசிகொண்டிருந்த அழகான பெண் வரவேற்பாளரிடம் கேட்டேன்.

கடனில் மூழ்கி மூடப்பட்டிருந்த, பாரதி பணி புரிந்த அந்தப் பத்திரிக்கையை ஜான் தாமஸ் என்ற கேரளத்து சென்ன வாழ் வழக்கறிஞர் 1977 வாங்கி, 30 மாதங்கள் கழித்து … அதனை சுந்தரேசன் என்ற பத்திரிக்கையாளர் மேர்பார்வையில் நடத்துகையில் … தனது மகன் ஃபிலிப் தாமஸின் அரசியல் வளர்ச்சிக்காக பாரதத்தின் பிரபலங்கள் பற்றிய ஒரு ஆங்கிலக் குறிப்பேட்டை வெளியிட முற்பட்டார் … அதில் நான் சில மாதங்கள் பணியெடுத்திருந்தேன்…

சம்பள பாக்கியைப் பெற்றுச் செல்லச் சென்றிருந்தேன்.

 “ஃபிலிப் அவரோட ஃபாதரோட பிஸியா discussion ல இருக்கார். கொஞ்சம் நேரமாகும்!”

“தம் அடிக்கும்” பழக்கமுள்ள நான், அலுவலகக் கட்டிடத்தின் வெளியே காத்திருப்பதாகக் கூறி வெளியேறினேன்.

திடீரென கரண்ட் ஆஃப் ஆயிற்று.

குளுகுளு வசதியுள்ள தனது அறையின் ஜன்னலை, காற்றோட்டத்திற்காக ஜான் தாமஸ் திறந்தார்.

 “உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு வரும்னு நெனச்சு … இந்த போணியாகாத பத்திரிக்கையை வாங்கினேன் … இதுக்காகவே Who Is Who ன்னு ஒரு English புக் போட செலவும் பண்ண சம்மதிச்சு … உன்னோட வேலையைப் பார்க்க ஒரு அளவுக்குத் தொழில் தெரிஞ்ச, பல மொழி பேசற பத்திரிகைக் கத்துக்குட்டியயும் வேலயில சேர்த்து விட்டேன் … நீ என்னடான்னா ஆஃபீஸ்ல தண்ணியடிச்சு, பொண்ணுங்களோட கூத்தடிக்கும்போது … கஞ்சா… அபின்…”

மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கோபத்தில் ஒலித்த ஜான் தாமஸின் குரல், திறந்த ஜன்னல் உபயத்தில் காதில் விழ, கோபத்துடன் அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன்.

தறையில் காறி உமிழ்ந்தேன்.

பாக்கியை வாங்காமலேயே அக்கட்டிடத்திலிருந்து வெளியேறிய நான்…

திரும்ப அதனுள் இது நாள் வரை – அதன் பெயர் – ஷேப் – முதலாளிகள் – எல்லாமே மாறிய பின்பும் செல்லவே இல்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சுமார் 1 மாதத்தில் ஜான் தாமஸ் காலமானார்.

அக்டோபர் 7 1991

வக்கீல் பணி புரிந்த ஃபிலிப் தாமஸ், பல முறை விபச்சாரிகளுடன் பல ஹோட்டல் அறைகளில் மாட்டிக் கொண்டு அவ்வப்போது யாரேனும் பெரிய மனிதர்கள் தயவில் வெளியே வந்ததை அறிந்து நகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த நான், அவரை ஒரு நீதி மன்றத்தில் சந்திக்க்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தது.

இராயப்பேட்டையில் ஒரு அச்சகத்திற்கு நான் அளித்திருந்த செக் திரும்பியிருந்தது.

அதற்கான மூல காரணம் – அச்சகத்தின் உரிமையாளர்கள் நான் கொடுத்த பணியைக் கெடுத்ததும், அதனால் நான் அனுப்பிய புத்தகங்களுக்கான பணம் வராததும் தான் என்றாலும், அவர்களிடம் பணம் இருந்த காரணத்தால் … அச்சக உரிமையாளர்களால் என் மீது சைதை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர முடிந்தது.

பிடி வாரண்டும் வாங்கியிருந்தார்கள்.

காவல் துறையில் எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி, பல நல்ல நண்பர்கள் உண்டு.

“உங்க மேல வாரண்டு போட்டிருக்காங்க. நான்க அதை execute பண்ணமாட்டோம் … நொண்டிச் சாக்கு எதையாவது சொல்லி சமாளிச்சிடறோம். பணம் இல்லன்னா சொல்லுங்க …ஏதாவது ஏற்பாடு பண்ணி கோர்டுல கட்டிடறோம்,” என்றார் ஒரு காவல் துறை நண்பர்.

“அடுத்த வாய்தா வரை பொறுத்துக்குங்க,” என்றேன் சுருக்கமாக.

மூத்த வழக்கறிஞர் பஞ்சாக்ஷரமூர்த்தி எனக்காக இலவசமாக ஆஜரானார்.

வாரண்டை ரத்து செய்யச் செய்தார்.

ஒரே வாய்தாவில் … எப்படியோ பணத்தை நீதிமன்றம் வாயிலாகக் கட்டினேன்.

“ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரி எங்க பத்திரிக்கை ஆஃபீஸுக்கு வர்றப்பப் பேசுவ … இப்ப செக் திரும்பி… கிரிமினல் …”

நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது அச்சகத்திற்காக ஆஜரான ஃபிலிப் தாமஸ் என்னைப் பார்த்துக் கொக்கரித்தார்.

81ல் நீ பாம்க்ரோவ் ஹோட்டலில் ஒரு விருப்பமில்லாத நடிகையை வலுக்கட்டாயமாக அணைச்சுகிட்டு இருந்த நேரத்துல, காவல் துறையிடம் பிடிபிட்டு உதை வாங்கிகதறி அழுதப்பஉயர் அதிகாரிகளிடம் உன் தந்தையின் சிபாரிசின் பெயரில் நானும் என் நண்பனான க்ரைம் ரிப்போர்ட்டர் தாமஸும் சொன்னதால் தான்லாக்கப்பில் அடைபடாமல் தப்பித்தாய், என எனக்கு அப்போது வந்த கோபத்தில் நானும் சொல்லியிருந்தால் … ஃபிலிப்புக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என உணர்ந்து …

“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்!” என முணுமுணுத்தவாறு என் வழியில் சென்று விட்டேன்.

2006 ல் ஃபிலிப் தாமஸ் காலமானார்.

அந்தப் பத்திரிகையில் பணி புரிந்த சிலர் இன்று ஒரு சில தொலைக்காட்சிச் சானல்களில் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக் கோர்வையைப் படித்தபோது, அவர்களுள் சிலரது கண்களில் கண்ணீர் மல்கியது.

“நாட்டுல இவ்வளவு அநியாயமா நடக்குது?”

கேள்வியை, ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் பொறுப்பில் உள்ள ஒரு நண்பர், தேனீர் அருந்தியபடிக் கேட்டார்.

பாரதியின் பாஞ்சாலி சபதம் நாடகத்திலிருந்து சில வரிகள் நினைவிற்கு வந்தன.

புனிதமான வேள்விக்குரிய பொருட்களை புலை நாய்கள் தின்றிட வைத்திடல் போல், பொன்னாலான உத்தரங்களுள்ள மாளிகை கட்டி பேய்களை அதில் குடியமர்த்துவது போல், மனிதனை விற்றுப் பொன் வாங்கி அதிலோர் அழகிய ஆபரணம் செய்து அதனை ஆங்கோர் ஆந்தைக்குப் பூட்டி அழகு பார்ப்பது போல், கேட்பதற்கு ஆளில்லாமல் உயிர்த் தேவியைக் கீழ் மக்கட்கு அடிமையாக்கினான் தருமன். தர்மம் அழிந்து போய், சத்தியமும் பொய்யாகி, தவங்களனைத்தும் பெயர் கெட்டு மண்ணாகி, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப் பாய்ந்ததுபோலாக, மோன முனிவர்கள் முறை தவறி என்ன செய்கிறோமென்று அறியாமல் மதி மயங்க, வேதங்கள் பொருளை இழந்து வெற்றுரையாகி விட, நாதங் குலைந்து நடுமை யின்றிப் பாழாக, கந்தர்வ ரெல்லாம் களையிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவரும் பித்துற, பிரம்மன் நாவடைத்துப் போக, சரஸ்வதி தேவிக்கு புத்தி மயங்கிட, வான்முகில் போன்ற கருநிறத்துத் திருமால் யோகநித்திரை கலைந்து ஆழ்ந்த துயிலெய்திவிட, செல்வத்தின் அதிபதியாம் ஸ்ரீதேவி முகத்தின் செம்மை நீங்கிக் கருமையாக, மகாதேவன் யோகம் மதிமயக்கமாகி விட, சூரியனாந் தெய்வத்தின் முகத்தே யிருட் படர… இப்படியெல்லாம் குழப்பம் ஏற்பட்டதாம். நொந்துபோனவர் மனம் சுடும்படியாகச் சொல்லும் சொல் கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்; கற்கும் வித்தைகளைத் தடுத்துவிடும். பேராசையினால் தவறானவைகளைச் செய்கிறீர்கள். வரக்கூடாத கொடுமைகளும், பெரும் விபத்துக்களும் உங்களுக்கு வந்து சேரும், என்று விதுரர் கௌரவர்களை எச்சரித்ததாக பாரதி காவியம் படைத்தார்.

வானவெளியினின் நடுவினிலே பறந்திடும் கருடனின் மேல் சோதிக்குள் ஊர்ந்திடும் கண்ணா, சுடர்ப்பொருளே, பேரருட் பொருளே, அன்று இரணியன் மகன் பிரகலாதனிடம்கம்பத்தில் உள்ளானோ, அடா! காட்டு உன் கடவுளைத் தூணிடத்தே, வம்புசெயும் மூடா” என்று மகனிடம் உறுமிக்கொண்டு தூணை உதைத்தவனை அந்தத் தீயவல் இரணியனின் உடல் பிளந்தாய்! நம்பி, நின் அடி தொழுதேன், என்னை மானமழியாமல் காத்தருள்வாய்,” என்று பாஞ்சாலி இறைவனை வேண்டினாள். சேலை உதவி கிட்டி, அவளது மானம் காக்கப்பட்டது என்றார் அந்த மஹான், தனது பாஞ்சாலி சபதம் நாடகத்தில்..

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்… தருமம் மறுபடி வெல்லும்! என்று கூறிய பாரதி மட்டும் இன்று உயிருடன் திரும்பி வந்தால், ‘மீண்டும் என்னை மிதித்திடு லாவண்யா,’ எனப் பார்த்தசாரதிக் கோவிலில் கஞ்சா அடித்தது போல நடித்து கூக்குரலிடுவான்,” என்றேன்.

“அது ஏன்?”

“எண்பதுகளில் தமிழக சட்ட சபையில் இன்று முதல்வராக விளங்கும் ஜெயலலிதாவின் புடவைத் தலைப்பு பற்றி இழுக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. காலம் மாறி விட்டது. பலர் பழங்கால பாரதத்தையும், பாரதத்தின் சுதந்திரம் கிடைக்க உழைத்த பாரதி போன்ற மஹான்களையும், அவர் உருவாக்கிய புதுமைப் பெண் என்ற கொள்கையையும், பெண்குலத்தின் பெருமை தமழகத்தின் அரச அவையிலேயே அவலம் அடைந்ததையும் மறந்து – நடு ரோட்டில் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதையும், பட்டப்பகலில் ரயிலடியில் கொல்லப்படுவதையும் நினைக்கச் செய்கிறதே இந்த மண்ணாங்கட்டி பேனா உழைப்பளியின் பாழும் மனம்! இதை பாரதி கண்டிருந்தால், அந்த மானமுள்ள கவிக்கோ வேறென்ன செய்திருப்பான்?”

ஒரு முறை வெறுப்புடன், விரக்தி ததும்பச் சிரித்தேன், அவரிடமிருந்து விடை பெற்றேன்.

சிரிப்பதா, அழுவதா எனக் குழப்பமும் சந்தேகமும் 80களில் துவங்கி, 90களில் ஆழத்தைப் பெற்று, 2006ல் அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்பும், ஒரு நெருடல் மட்டும் இன்றும் என்னை நிழலாய்த் தொடர்கிறது.

Advertisements

Author: haritsv

42 years' unblemished record of being an investigative journalist. Print quality journalist in 3 languages - English, Tamil, Hindi. Widely travelled, worldwide. Cantankerous and completely honest.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s