உளவுகாத்த கிளி – 2

இக்கதையின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

லண்டன், இன்றே

சுமார் 15 வருடங்களுக்கு முன், எனது பயிற்சியின் ஒரு பகுதியாக நான் லண்டனுக்கு அனுப்பப்பட்டிருந்தேன்.

அப்போது எனக்குப் பல விஷயங்கள் கற்றுத் தரப்பட்டன.

அவற்றின் சுருக்கம்:

லண்டன் நகரில் எங்கு வேண்டுமானாலும் செல்ல அதன் 11 பெயர்களுள்ள மெட்ரோ ரயில் மார்க்கங்கள் உதவுகின்றன.

அவற்றைப் பொதுவாகட்யூப்” [பெரும் குழாய் என இச்சொல்லை பொருள்படுத்திக் கொள்ளலாம்] என அழைப்பார்கள்.

லண்டன் ட்யூப் அல்லது அன்டர்க்ரவுண்ட் அல்லது மெட்ரோ என அழைக்கப்படும் நகரின் மீதும் கீழும் பின்னப்பட்டுள்ள தண்டவாள வலை அலாதியானது.

சில இடங்களில்தரைக்குக் கீழே 3 வெவ்வேறு நிலையங்களை, வெவ்வேறு லெவல்களில் காணலாம்.

நகரின் எந்த ஒரு பகுதிக்கும் ட்யூப் வழியாகச் சென்று விடலாம். பின்பு அதிகப்படியாக, 5 நிமிடம் நடை பயணம் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.

காலை 9-30க்கு மேல் இரவு 12 வரை பயணிக்கநாள்பாஸ்கிடைக்கும். விலை வெறும் 10 பவுன்கள்அதாவது இங்கிலாந்து நாணயத்தின் 10 ரூபாய். அதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் ரூ.900. ஒவ்வொரு நிலையத்திலும் ஏற, இறங்க மின்சாரத்தில் நகரும் படிக்கட்டுகள் உண்டு. பற்றாக்குறைக்கு லிஃப்டுகளும் உள்ளன.

ரயில் நிலையங்களுள் டிக்கட் வாங்காமல் நுழைந்த, அல்லது டிக்கட் இல்லாமல் பயணம் செய்த எவரும் ஒரு சிறு கட்டணமாவது செலுத்தாமல் வெளியேற முடியாது.

லண்டன் நகருக்கு வெளியே உள்ள ஒரு சில ரயில் நிலையங்களில் எப்போதாவது டிக்கட் கவுண்டர்கள் இயங்காமல் இருந்து, பயணத்தை மேற்கொள்வோர் நகரினுள் நுழைந்து, ஏதேனும் ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியேற நேர்ந்தால், ரயிலில் வந்ததற்கான கட்டணத்தைச் செலுத்திய பின்பு தான் வெளியேற முடியும். அதைச் செய்யாமல் வெளியேறஒவ்வொரு ஸ்டேஷனிலும் உள்ள சிறு கேட்கள் அனுமதி அளிக்காது. அவற்றைத் தாண்டிக் குதித்துப் போக முற்பட்டால், அலாரங்கள் அடித்து ஊர் கூடும். அடுத்த சில வாரங்களுக்கு சிறைக் களிதான் உணவு, இரும்பு பெஞ்சின் மீது விரிக்கப்பட்டுள்ள ஒல்லியான கம்பளம் தான் மெத்தை. தனிமை தான் தோழன்..

பயணக்கட்டணத்தை காவலுக்கு நிற்கும் பரிசோதகரிடம் செலுத்தினால், கேட் திறக்க அவர் பொத்தானை அழுத்தி உதவுவார்.

பக்கத்து ஸ்டேஷனிலிருந்து தான் வந்தேன்,” என கட்டணத்தைக் குறைக்கும் பொருட்டு, பொய் சொல்வோரிடம் மெட்ரோ ரயில் சிப்பந்திகள் பட்டிமன்றம் நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்கும் வீண் வேலையில் இறங்குவதில்லை.

அதற்கு பதிலாக, “நீங்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பான தகவல். ‘உங்களிடம் பணம் குறைவாக இருப்பது,’ இதன் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பி, உங்களை வெளியே செல்ல அனுமதிக்கிறோம்,” என்று கூறி விடுதலை அளித்து விடுவார்கள். அப்படிப் பொய் சொல்லிச் செல்வோரின் முகங்களை ஸி ஸி டி வி காமிராக்கள் பதிவு செய்து கொள்ளும். அதே போன்ற தவறை அடுத்த முறை செய்வோர் கம்பிகளை எண்ணி, பள்ளிக்கூடத்தில் விட்டுப்போன கணக்கை, திருவள்ளுவர் ஸ்டைலில் சொன்னால், “கசடறக் கற்று” “கற்ற களவைமறக்கக் கற்று,” அதன் பின் விடுதலை கேட்க நீதி மன்றத்தில்தக்கவாறு நிற்கலாம்!”

பொதுவான உலக நியதிப்படி, சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவர் மீது குற்றம் நிரூபணமாகாத வரை அவர் நிரபராதி எனக் கருதப்பட வேண்டும். லண்டனில் இந்த தத்துவம் – இது போன்ற சிறு விஷயங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

வாக்ஸ்ஹால் ரயில் நிலையத்தின் வாயிலில் நின்றபடி ஒரு சிறு கூழாங்கல் பலமாக வீசப்பட்டால், அது ப்ரிட்டனின் புகழ்பெற்ற எம் 6 உளவு ஸ்தாபனத்தின் வாயிலருகில் விழும். எம் ஐ 6 என்றால் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் 6. அதன் சரியான பெயர் ஸீக்ரெட் இன்டலிஜன்ஸ் ஸர்வீஸ் அல்லது எஸ் ஐ எஸ். இந்த ஸ்தாபனத்தில், முன்னொரு காலத்தில், இயன் ஃப்ளெமிங் என்பவர் உளவாளியாகப் பணி புரிந்தார். தனது உண்மையான அனுபவங்களுடன் பலமான கற்பனையைக் கலந்து அவர் உருவாக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ஜேம்ஸ் பாண்ட்.

அந்தக் கதாபாத்திரத்தில் முதன் முதலில் ஷான் கானரி நடித்தார். அவரது “தலைவர்” பாத்திரம் எப்போதுமே ஆங்கில எழுத்து ‘எம்’ என்று தான் அறியப்படும்.

ஆரம்ப காலங்களில் அந்தப் பாத்திரத்தில் ஆண்கள் நடித்தனர். சமீப காலமாக, ஜூடி டென்ச் என்ற பெண் அப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, ஸ்டெல்லா ரிமிங்டன் என்ற பெண் அப்பதவிக்கு அமர்த்தப்பட்ட நிகழ்வுதான் அதற்கான காரணம்.

அதென்ன ‘எம்’ எனக் கேட்போருக்கான ஒரு கொசுறுத் தகவல்:

எம் ஐ 6 என்ற அமைப்பை உருவாக்கியவரது பெயர் ஸர் மான்ஸ்ஃபீல்டு கம்மிங்ஸ்.

நிஜ வாழ்வில் எம் ஐ 6 ஸ்தாபனத்தில் அதன் தலைவரை எப்போதுமே ‘ஸி’ என்று தான் சொல்வார்கள். ‘ஸி’ என்ற எழுத்து கம்மிங்க்ஸ் என்ற வார்த்தையின் முதல் ஆங்கில எழுத்து.

கொஞ்சம் கிண்டலுக்காகவோ என்னவோ, தனது ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் மான்ஸ்ஃபீல்டு என்ற பெயரின் முதல் எழுத்தான ‘எம்’ ஐ ஃப்ளெமிங் பயன்படுத்தினார் என நம்பப் படுகிறது.

லண்டன் அண்டர்கிரவுண்டில் பிச்சை எடுப்போர் உண்டு. அவர்களும் டிக்கட் வாங்காமல் நுழைய முடியாது. ஏதேனும் ஒரு இசைக்கருவியை இயக்கத் துவங்கி, அருகில் ஒரு தொப்பியை திறந்த நிலையில் வைத்து விடுவார்கள். இசையை ரசிப்போர் இஷ்டப்பட்ட தொகையை அந்த உழைப்பாளிக்குக் கூலியாக அளிப்பது வழக்கம். நமது ஊர்களில் செய்வது போல காவல்துறையினர் இந்த வகை மனிதர்களைத் துன்புறுத்துவதில்லை. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, கொள்ளையர்கள் ஆகாமல், உழைத்துச் சம்பாதிப்பவர்களை ப்ரிட்டனின் அதிகார வர்க்கம் துன்புறுத்துவதில்லை.

வாக்ஸ்ஹால் ரயில் நிலையத்தில் மட்டும் பிச்சை எடுப்போரைப் பார்க்க முடியாது. அந்த நாட்டின் உளவு ஸ்தாபன தலைமைப் பீடம் இருக்கும் இடத்தில் யார் தான் அதை அனுமதிப்பார்கள்?

பற்றாக்குறைக்கு, அப்பகுதியில் பல வி பி க்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுள் சிலர்: முன்னாள் பிரதமர் ஜான் மேஜர், முன்னாள் நிதியமைச்சர் அலிஸ்டெயர் மக்ளீன் டார்லிங், முன்னாள் சட்ட அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா, புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரீ ஆர்ச்சர்இத்யாதி.

இதை எல்லாம் தவிர, கண்ணுக்கெட்டும் தூரத்தில் ப்ரிட்டிஷ் பாராளுமன்றமும் அந்த ரயில் நிலையத்திலிருந்து தென்படும்.

சென்னையில் போயஸ் தோட்டத்திலிருந்து முதல்வர் புறப்படும் முன் கையில் ஒரே ஒரு அரைக் கம்புடன் மொபைலில் பேசியபடி நின்று நேரத்தை வீணாக்கும் காவல்துறையினரைப் போல, போலீஸார் லண்டனின் அப்பகுதியில் பாதுகாப்பு அல்லது பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடியாது.

ஆனால், ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் ரகசியக் காமிராக்கள் உண்டு. பிச்சை எடுப்போர் மாறுவேடத்திலுள்ள பயங்கரவாதிகளா அல்லவா என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் பழக்கம் லண்டன் காவல்துறையினருக்குக் கிடையாது. அங்கு வரத் தேவையான வேலை இல்லாத எவனோ, எவனோ உலாத்தினால், காவல் நிலையத்தில் பல மணி நேரம் கேட்கப்படும் ‘கஷ்டமான’ கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டி வரும்.

ப்ரிட்டிஷ் அரசு இதை எல்லாம் இலை மறைவு காய் மறைவாகச் செய்கிறது. உன்னிப்பாக கவனிக்காதவர்களுக்கு இதெல்லாம் நடப்பதே தெரியாது. என்போன்றவர்களுக்கு இந்தத் தகவல்கள் உலகறிந்த சிதம்பர ரஹஸ்யம்.

பிக்காடிலி லைனின் க்ரீன்பார்க் ரயில் நிலையத்தில் – விக்டோரியா லைன் வண்டியில் மாறி ஏறி, சரியாக 39 நிமிடங்களில் வாக்ஸ்ஹால் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன்.

சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் கையில் “விக்ரம்” என்று கொட்டை எழுத்துக்கள் உள்ள பெயர் பலகையுடன் நின்றிருந்தான். பார்ப்பதற்கு நம் ஊர் எனத் தோன்றியது. நல்ல, உயர்தர ஸூட் அணிந்திருந்தான். கண்களில் ஒருவித மிரட்சி.

“தட் ஈஸ் மை நேம்,” என்றேன் ஆங்கிலத்தில்.

“நோ இங்க்லிஷ்!” என்ற சிறுவன், தலையை இரு புறமும் பலமாக ஆட்டினான்.

“தமிழ்?”

பூம்பூம் மாடுபோல மண்டையை மேலும் கீழுமாக ஆட்டி ‘ஆம்’ என்றான். புதிரின் விடை புரியாமல் புருவங்களை நெரித்தேன்.

“உன் பெயரென்னப்பா?”

“சாலிவாஹனன்!”

அணிந்திருந்த கோட் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தான் அவன். அதில் எழுதப்பட்டிருந்த 4 வார்த்தைகள் என்னை 7 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று, பல திகில் நிறைந்த சம்பவங்களை நினைவு படுத்தின.

-தொடரும்

Advertisements