உளவுகாத்தகிளி – 5

இந்தக் கதையின் முதல் அத்தியாயத்தின் லிங்க் – இங்கே!

இக்கதையின் இரண்டாவது அத்தியாயத்தின் லிங்க் – இங்கே

இக்கதையின் 3-வது அத்தியாயத்தின் லிங்க் – இங்கே!

இக்கதையின் 4-வது அத்தியாயத்தின் லிங்க்

சென்னை, அன்று

வனிதா கிட்டத்தட்ட மனைவி போல “குறிப்பறிந்து” எனது தாற்காலிகப் பள்ளியறைகளில் ஒத்துழைத்தவள்.

5 நட்சத்திர ஹோட்டல் அறைகளில் அவளைச் சந்தித்தேன். எனது உடல் சுகத்திற்கான செலவில் – அவளிடமிருந்து பல அரசியல் ரகசியங்களை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.

எட்டு வருடங்கள் முன்பு

அவளை இறுதியாக, மஹாபலிபுரத்திலுள்ள டெம்பிள் பே என்ற நட்சத்திர ஹோட்டலில் இரவில் சந்தித்திருந்தேன்.

அதிகாலையில் விடை பெறும்போது என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

“இதென்ன, தமிழ் சினிமா மாதிரி ஸீன் போடற?”

எனது கேள்விக்கு அவள் விரக்தியுடன் விடை அளித்தாள்.

“நா ஜீவிதம்லோ இர்கற ஷாக்கிங் ஸீன்ஸு – எந்த சினிமாலோ கூடா வந்ததில்லே. நுவ்வுக்கு கொந்தரகா – சாரி – சீக்கிரமாத் அதி தெர்ய வரும்!”

எனது பூர்வீகம் குண்டூர் என நான் அது நாள் வரை அவளிடம் சொல்லி இருக்கவில்லை.

நான் திருத்தணிமுதல், திருச்செங்கோடு உட்பட, திருச்செந்தூர் தமிழ் வரை எல்லா ஸ்டைலிலும் பேசும் திறமை உள்ளவன். இந்தத் “திரிசிமத் திருப்பணியை” என்னால் பல மொழிகளில் செய்ய முடியும்.

“நாக்கு தெலுகு பாக தெலுசு. காவலண்டே…,” என்று எனது தெலுங்கு ஞானத்தைக் காட்ட முயன்றேன்.

“நேனு கன காலம் ஈல பங்காரு தேடறதுலோ சுத்தியாச்சு. பெரும்பாலும் தெலுங்கு மொழியை விசர் …மறந்தாச்சி. டமில்லோ பேசறோம், அதி சௌகர்யமு!”

விசர் என்ற வார்த்தையை இலங்கைத் தமிழர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். அதன் சரியான பொருள், “பைத்தியம்”. “ஈல” என்ற வார்த்தை பேசும் தெலுங்கில் கிடையாது. “ழ” உச்சரிக்க முடியாதவர்கள், இலங்கையின் தமிழ்ப் பகுதியான “ஈழ”த்தை “ஈலம்” என்பார்கள்.

மூளையில் நண்டு பிராண்டிற்று. ஆனால் அப்போதிருந்த மனோ நிலையில், நான் வேறு விதமாகச் சிந்தித்தேன்.

மராத்தியில் விசர்ல என்றால் மறந்துவிட்டேன் என்று பொருள். ஒரு வேளை இந்த ஆந்திர அழகி அந்த மாநிலத்தின் மஹாராஷ்டிர எல்லையிலிருந்து வந்தவளா என கொஞ்சம் அவசரப்பட்டு எண்ண ஆரம்பித்தேன். அந்தத் தவறின் பொருள் சில வாரங்கள் கழித்து விளங்கிய போது, அதுகாலம் கடந்த ஞானம் என்ற உண்மையை உணர்ந்தேன்.

திடீரென வனிதா எழுந்தாள், நான் அளித்த பணத்தை மேஜை மீது வைத்து விட்டு, விடை பெறும் முன் சொன்ன வார்த்தைகள் எனது காதுகளில் இன்றும் ரீங்காரமிடுகின்றன.

“நீங்கோ குடுத்த காசு இப்போ நாக்கு தேவை லேது. ஆனா, இதே நீங்கள் நல்லபடியா எனக்கோசம் செலவு பண்ண வேண்டி காலமு வருமு. அப்புடு, இன்னிக்கு நேனு சொன்ன கதையை யோசீங்கோ!”

அந்த இறுதி வாக்கிற்குப் பின்னால், பயங்கரவாதம், தேசத்துரோகம், அரசியல் சதி, ஆயுத பேரம், பாரதத்திற்கான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நாசவேலைகளால் ஏற்படும் அபாயம் ஆகியவை அடங்கியுள்ள விஷவிதையை அவள் மிகவும் பூடகமாக உமிழ்ந்துவிட்டுச் சென்றாள் என்பதை அன்று நான் உணர்ந்திருக்கவில்லை. ‘கதை’ என்ற வார்த்தையின் விபரீத அர்த்தம் பிறகு என்னை என்னவோ செய்யவிருந்தது.

பிப்ரவரி 12 2009

அந்தச் சந்திப்பு முடிந்து சரியாக 37 நாட்களுக்குப் பிறகு எனது மொபைலுக்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தது.

“மிஸ்டர் விக்ரம்?”

“யெஸ்!”

“ஐ ஆம் டி எஸ் பி பெஜவாடா பாப்பி ரெட்டி ஃப்ரம் ராஜமுந்த்ரி ரூரல் போலீஸ், க்ரைம் ப்ரான்ச்!”

“அதுக்கென்ன இப்போ?”

“உங்க கர்ல்ஃபிரண்டு வாணி கவுண்டர்ஃபீட் – கள்ள ரூபா – நோட்ஸ் வியாபாரம் சேஸினப்புடு கை களவுமா மாட்டிகிட்டாங்கோ!”

“எனக்கு வாணின்னு யாரையும் தெரியாது.”

“பின்னே உங்க ஃபோன் நம்பரு அவளோட பர்ஸனல் டைரிலோ எப்டீ வந்திச்சீ?”

“இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி? நம்பரெல்லாம் தானா, சுயம்பு லிங்கமா எழுத்து வடிவத்துல உதிக்காது. யாராவது கையால எழுதி இருப்பாங்க!”

“ஒரேய் தொங்கலஞ்சாக் கொடுக்கா! எனக்கீ கிண்டல் பண்ணுதூ? சம்பேஸ்தான்ரா! உன்னோட ஃபுல் அட்ரெஸ் கரெக்ட்கா செப்பு. சொல்லல்லன்னாக் கூட நா கண்ட்பிட்ச்சிடுவான். கண்டுபிடிச்சி அரெஸ்ட் வாரண்டோட வர்வேன். அட்ரெஸ் செப்புரா! மீ அம்மா பூக்…”

 அவனது நாறும் கெட்ட வார்த்தைகளில் உள்ள காரம், எனது மூக்கை ஒழுக வைக்கும் முன் இணைப்பைத் துண்டித்து அந்த எண்ணிலிருந்தும் சரி, ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் தெரியாத வேறு எந்த எண்ணிலிருந்தும் சரி, தாற்காலிகமாக எனக்குக் கால்கள் வராமல் இருக்க சில பொத்தான்களை அழுத்தினேன்.

நியாயமாகப் பார்த்தால், மற்றவர்கள் மொபைல் நம்பரை இது போன்ற நேரங்களில் மாற்றி விடுவார்கள்.

நான் அப்படிச் செய்யவேண்டியதில்லை.

மொபைல் ஃபோன்கள் யார் பெயரில் என்று, எங்கே, எப்படி வாங்கப்பட்டன என்ற ஜாதகத்தை யார் வேண்டுமானாலும் கொஞ்சம் பணம் செலுத்தினாலோ, கம்ப்யூட்டர்களின் பாதுகாப்புப் பெட்டகங்களில் கன்னம் வைக்கத் தெரிந்தாலோ, அறிந்து கொள்வது இந்தக் காலத்தில் ரொம்ப, ரொம்ப ஈஸி.

என்போன்றோர் விஷயத்தில் இது பொன்ற செப்படி வித்தையை பிரயோகிக்க முயன்றால், முதலில் ஒரு பெயரும் ஒரு அட்ரெஸ் அடையாளமும் அகப்படும். அது அகப்பட்ட உடனேயே எனக்கும் என்போன்றவர்கள் பின்னணியில் இயங்கும் அரசு இயந்திரத்திற்கும் இச்செய்தி தெரிந்து விடும்.

உடனே தேடுவோரது ஜாதகம் எங்கள் கைக்கு வந்துவிடும். பின்னர் அந்த நபர்களோ ‘நபரிகளோ’ செய்யும் ஒவ்வொரு சிறு பணியும் கூர்ந்து கவனிக்கப்படும்.

கிடைத்த அட்ரெஸில் என்னைத் தேடிச் சென்றால், வீடு மாறிவிட்டதாகவும், புதிய விலாசமும் கிடைக்கும்.

இரண்டாவது விலாசத்திற்குச் சென்றாலும் அதே கதை தொடரும்.

சட்ட விரோதமாக யாரேனும் என்போன்றோருக்கு எதிராகச் செயல்படுவது தெரிந்தால் குறைந்த பட்சம் 4 மாநிலங்களில் நடந்த 8 கொலைக்கேஸ்களில் அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டு, கைதாகி, ஜாமின் கிடைக்க அரை மாமாங்கம் பிடிக்கும் அளவுக்கு ஆப்பு வைத்து விடும் பழக்கம் எங்கள் அமைப்புக்கு உண்டு. இதை அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்வோர் இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வந்து விட்டல், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை எல்லா நாடுகளிலும் உண்டு. இந்தக் கொள்கையை அரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்து, சொந்த விருப்பு வெறுப்பு சம்பந்தமான சண்டைகளுக்கு முடிவு தேடும்போது தான் சிக்கல். அதைச் சந்தேகமில்லாமல் அதிகார துஷ்பிரயோகம் என்று சொல்லலாம். மேற்படி விஷமிகளைப் பொறுத்த வரை இது போன்ர மொழியில் பேசினால் மட்டும் தான் அவர்களுக்குப் புரியும். “நாட்டுக்கு எதிராச் செயல்படற சதிகாரப்பசங்க சட்டத்தை மிதிச்சா, அதே பாணியில அவங்கள டேக்கிள் பண்ணணும். அடி, உதை, டார்ச்சர், எங்கவுண்டர் – இப்படி எதை வேணும்னாலும் செய்யத் தயங்கக் கூடாது. அந்த மாதிரி விஷயங்கள்ள அப்புறமா மாட்டிக்காம இருக்கற அளவுக்கு புத்திசாலித்தனமாச் செயல்படணும். அப்படிப்பட்ட விஷயங்கள்ள சொதப்பின, சட்டம் நம்மளக் கொதப்பும் போது சகிச்சுக்க வேண்டியது தான். இட் ஈஸ் அன் ஆக்குபேஷனல் ஹஸர்டு,” என்று அமரர் மோஹந்தாஸ் பதவியில் உள்ள காலத்தில் அடிக்கடிச் சொன்னதுண்டு.

இந்த ‘கில்மாத்ரி’ வேலையைக் காவல்துறையின் ஏதேனும் டிபார்ட்மென்ட் ஆள் செய்யத் துவங்கினால், அவனோ, அவளோ தேடல் தொண்டைத் துவங்கும்போதே  பணி மாற்றல் உத்திரவு தயாராகும். இரண்டாவது விலாசத்தில் ஏமாற்றம் நேர்ந்தவுடன், அந்த நபரின் கையில் – அவன் லஞ்சம் வாங்கும் பழக்கத்தால் கொழுத்துப் போயிருந்தால் – ஏதேனும் “கொத்தவரத்தான்பட்டிபோஸ்ட், கருப்பன் மூக்கு கிராமத்தில்” மின் விசிறி கூட இல்லாத ஒரு காவல் நிலையத்தில் கொசுக்கடி வாங்க டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கொடுக்கப்படும். நல்லவன் என்றால் ஒரு மிக முக்கியமான போஸ்டிங் கிடைத்து, மிக-மிக முக்கியமான கேஸ் – அதுவும் ஊடகங்களின் கவனிப்பால் காவல் சரகங்கள் முக்கி முனகிக் கொண்டிருக்கும் கேஸ் அல்லது கேஸ்கள் ஒப்படைக்கப்படும். பின்னர் அவனுக்கோ, அவளுக்கோ வேறு எதைப் பற்றியும் சிந்திக்க நேரமிருக்காதபடி செய்து விடுவோம். பின்னர் மேலும் உபயோக கரமான தரமானவன்/வள் என்றால், எங்கள் ஜோதியில் கலக்க அழைப்பு அனுப்பப்படும்.

இத்தனைக் காபந்துகளையும் தாண்டி யாரேனும் நாங்கள் விரித்துள்ள 7 பாதுகாப்பு வளயங்களயும் தாண்டினால், அது சம்பந்தமான கடிதப்போக்கு வரத்து, பதவி வகிக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மேஜையை அடையும். யார் அப்பணியில் இருந்தாலும், அவரது ஏதேனும் ஒரு உதவியாளர், “தேசியபாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தகவல் உகளுக்கு மறுக்கப்படுகிறது,” என்ற ஒரே ஒரு வரி பதிலை அனுப்புவார். ஆட்டம் க்ளோஸ்.

ராஜமுந்திரி முந்திரிக்கொட்டை மஹாபாபி ரெட்டி பேசியவிதத்திலிருந்து அவனுக்கு ஏதேனும் ஜெக்காளச்செருவு, அல்லது கோண்ட நரசிரெட்டிவாரிப்பேட்டா என்ற குக்ராமத்திற்குப் போகும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை யூகித்து, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து, அதை உடனே மறந்தேன்.

‘வாணி’ என்றானே அவன்! அது ஒரு வேளை வனிதாவா இருக்குமோ?

கள்ள நோட்டு விவகாரம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.

இரண்டே மணி நேரத்தில் உண்மைகள் அனைத்தையும் கண்டுபிடித்து விட்டேன்.

வனிதா [எ] வாணி [எ] விஜய சந்திரிக்கா – வயது 29 – ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் மாரி வ்யாக்ரபாத ரெட்டி. ரூ.10 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் ராஜமுந்திரியின் அய்யப்பா நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஷெல்டனில் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து சிக்கினாள் என அறிந்தேன்.

“நல்லாக் கம்பெனி குடுத்தா. பார்க்கறதுக்கு நல்லாவும் இருந்தா. நல்லா சம்பாதிச்சுகிட்டும் இருந்ததா. இவளுக்கு ஏன் இந்த ஈன புத்தி?

யோசித்தபடி ஒரு பெருமூச்சு விட்டேன்.

“குறைபட்டாலே கிடைக்காது, கோர்ட்டுக்குப் போனா ஜெயிக்காது, ஜெயில் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது! போனால் போகட்டும் போடா….”

பாலும் பழமும் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாட்டை கொஞ்சம் கெடுத்து முணுமுணுத்தேன். அவளை மறக்க நினைத்தேன்.

சென்னையில் எனக்கு அவளை அறிமுகப்படுத்திய டபிள் எம் ஏ வுக்கு ஃபோனைப் போட்டேன்.

“என்ன தலைவரே! இன்னிக்கு புதுசா ஒரு உருப்படி ஒரிசாவுலேர்ந்து…”

“டேய் அழுகின விளாம்பழத்துல நெளியற கக்கூஸ் புழுவே! கூட்டிக்குடுக்கற வேலை தான் பண்ணுவேன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். ஆனா நீ கள்ள நோட்டடிக்கிற கமால் வேலை கூட பண்றே போலிருக்கு!”

எனது குரல் பழுக்கக் காய்ச்சிய ஈயமாக அவனது காதுகளைத் துளைத்தது போலும்.

“என் கொளந்த மேல சத்தியமாச் சொல்லறேன், தலைவரே! அப்படி எதுவும்…”

“இனி எனக்கு ஃபோன் கீன் பண்ணினே … உன் மூஞ்சி மேல ஆஸிட் ஊத்தி, அதுக்குமேல நல்ல ரத்தச் சிவப்பான ஆந்திரா அன்ந்தபூர் மொளகாத் தூளைக் கரைச்சி ஊத்தற ஆள மும்பைலேந்து லட்ச ரூவா குடுத்து வரவழைப்பேன்.  வெய்டா ஃபோன பொறுக்கிப் புண்ணாக்குப் புண்…”

வாயில் வந்த பாண்டியன் பைந்தமிழ் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்து இணைப்பைத் துண்டித்தேன். அவனிடமிருந்து இனி என் மொபைலுக்குக் கால் வராதபடி செய்தேன்.

“காணாமல் போய்விட்டதாக” அறிவிக்கப்பட்ட தமிழகத்தின் பல்கலைக்கழகமொன்றின் வேந்தரது அடிவருடியான ஒரு சினிமாத் துறை “மதனகாமராஜன்” செய்வதுபோல, இந்த மாமாவும் கங்கையின் ஊற்றுக்கண்ணான கங்கோத்ரிக்கு ஓடி விடுவான் என்ற செய்தி வெளிவந்தால் நான் ஆச்சிர்யப்பட மாட்டென். கேவலமான, சாதரணமான வெறும்பயல்த்தனமான மாமாக்களால் வேறேதும் செய்ய முடியாது. “காணாமல் போயிருந்த” மதனும் அந்த ரகம் தான், என விஷயமறிந்தவர்களுத் தெரியும்.

3 நாட்களுக்குப் பிறகு அடுத்த அதிர்ச்சி. வேலூரிலிலுள்ள ஒரு பப்ளிக் பூத்திலிருந்து ஒரு கால்.

“நேனு வ்யாக்ரபாத ரெட்டி மாட்லாடறேனு.”

“எனக்கு எந்த வாய்ப்பாட்டு ரொட்டியையும் தெரியாது..”

“மீரு குண்டூரைச் சேர்ந்த துர்லபாடி விக்ரம் ராவ் காரு தானே? உங்கள் மூலமா பாக்வத் ஸின்ஹாவுக்கு ஒரு மெஸேஜை வனிதா குடுக்க சொல்லிச்சி!”

பகவத் சின்ஹா எனது டெல்லி பாஸின் பெயர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!

-தொடரும்.

Advertisements