உளவுகாத்தகிளி – 4

இந்தக் கதையின் முதல் அத்தியாயத்தின் லிங்க் – இங்கே!

இக்கதையின் இரண்டாவது அத்தியாயத்தின் லிங்க் – இங்கே

இக்கதையின் 3-வது அத்தியாயத்தின் லிங்க் – இங்கே!

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் ஒரு தனியார் ஸ்தாபனமாக எங்கள் அமைப்பை, அரசின் பொறுப்பான ஒரு சில அதிகாரிகள், அதன் ஒரு ரகசியப் பிரிவாக உருவாக்கினார்கள். தங்களது அதிகாரத்தை எந்த நிலையிலும் தவறாகப் பயன்படுத்தும் எண்ணம் மனதளவில் கூட உதிக்காத ஆண்களும் பெண்களும் மட்டுமே இதில் பணிக்கு அமர்த்தப் பட்டார்கள். பிற அரசு அலுவலகங்கள் போல இதில் இட ஒதுக்கீடு கிடையாது. தகுதிக்கு மட்டுமே மதிப்பு. நேரும், அல்லது நேர்ந்த தவறுகள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பேற்பது இதன் ஒவ்வொரு வீரனுக்கும்-வீராங்கனைக்கும், ஆற்ற வேண்டிய இன்றி அமையாத கடமை எனத் தெளிவக பணியில் சேரும்போதே சொல்லப்படும்..

ஒரு சிறு “சறுக்கல்” ஏற்பட்டால், நாங்கள் பணியை ராஜினாமா செய்வதா வேண்டாமா என்ற பட்டிமன்றமெல்லாம் நடத்தாமல், சத்தம் போடாமல் கால் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி, இடத்தைக் காலி செய்து விடுவது வழக்கம். அதைச் செய்த பின்பு புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி எனக் கூறி ரகசியங்களை வெளியிடும் துரோக வேலைகளைச் செய்யும் எண்ணம் எங்களுள் யாருக்கும் வரும் வாய்ப்பே கிடையாது. இது வரை எங்கள் இயக்கத்திலிருந்து 3 நபர்கள் தான் வெளியேறி உள்ளார்கள். அம்மூவரும் இன்று பெரும் தொழிலதிபர்கள். அவர்களுள் ஒருவர் பல தின இதழ்களை, பல மொழிகளிள் வெளியிடுபவர். ஆனால், அவருள், புத்தகம் எழுதும் எந்த எண்ணமும் இது வரை உதித்ததில்லை. வருங்காலத்தில் அப்படி ஒரு எண்ணம் யாருடைய மனதிலாவது உதித்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கான 5-வார்த்தைகள் கொண்ட விடை முதலிலேயே எங்கள் எல்லாருக்கும் சொல்லப்பட்டது: “செய்ய முற்படுபவரின் அகால மரணம் நிச்சயம்”.

பாரதத்தின் பெரும் நகரங்களான புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகியவற்றில் எங்களுக்கு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் மிகவும் ரகசியமான ஒரே ஒரு ஆவணத்தில், ஒரே ஒரு இடத்தில் எங்கள் அமைப்பின் உண்மையான – இன்டிபென்டென்ட் இன்டெலிஜன்ஸ் கேதரிங் யூனிட் [ஐ ஐ ஜி யூ] – அதாவது சுதந்திர உளவுத் தகவல் சேகரிக்கும் அமைப்பு – என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத் தகவல்களையும், பொருளாதாரத்தைப் பாதிக்கும் அரசியல் நிகழ்வுகளையும், ஒன்று சேர்த்து நோக்கி, அதனால் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அடிப்படையிலான அறிக்கைகள் தயாரித்து, உருப்படியான யோசனைகள் வழங்கும் பூந்தொட்டிகளாக நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம். நமது நாட்டின் பொருளாதாரத்தை ஒரே வார்த்தையில் குறைப் பிரசவம் என வர்ணிக்கலாம். ஆனால், அப்படிப் பிறந்த குழந்தைகளை மருத்துவமனைகளில் இன்க்யூபேட்டர்களில் அடைகாத்துக் காப்பாற்றுவார்கள். அப்படி உயிர் தப்பிய பல குழந்தைகள் பிற்காலத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளனர்.  எங்கள் செயல்பாட்டை இன்க்யுபேட்டர்களுடன் ஒப்பிடலாம்.

அரசின் மற்ற பெரும்பாலான அமைப்புக்களைப்போல அல்லாமல், எங்களது இயக்கம் சம்பாதிப்பதை, “கொள்ளை லாபம்” என்று கூடச் சொல்லலாம். ஆனால், அதற்கான சரியான வரியை, எந்த வித எய்ப்பும் இல்லாமல் உரிய நேரத்தில் செலுத்தி விடுவோம்.

நாங்கள் உருவாக்கும் சிறு, பூந்தொட்டித் தனமான செடிகள், தக்க வியாபார ஸ்தாபனங்களுக்கு அளிக்கப்படுவதுண்டு. அதை, அவற்றின் மாத்து நாத்து நடுதல் நிகழ்வு எனலாம். அந்தச் செடிகள் வளர்ந்து தழைக்க அரசு இயந்திரம் உதவ எங்களுள் சிலர் வழிவகை செய்து கொடுப்போம். அந்த செயல்பாட்டின் வாயிலாக எங்கெல்லாம் தீய எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது என்பதை மோப்பம் பிடிக்கப் பயன்படுத்துகிறோம். அந்தத் தகவல்களால்,  வரக்கூடிய பயங்கரவாத அபாயங்களை இயன்ற வரை தடுத்து வருகிறோம். நாங்கள் செய்யும் தொழில் பற்றி, பெற்றோர், உடன்பிறப்புக்கள், மனைவி, மக்கள் இப்படி யாரிடமும் மூச்சுக் கூட விடக்கூடாது என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள, மீற முடியாத கட்டளை.

இந்தப் படையில் பணி புரியும் வீரர்-வீராங்கனைகளது குடும்பத்தில் யாரேனும் ஒரு அங்கத்தினர் சந்தேகிக்கும்படியாகச் செயல்பட்டால் – அது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற உப-கட்டளையும் உண்டு.

இன்று எனது ‘மாஜி’ மனைவி ஆகி விட்ட சாவித்ரி – 15 வருடங்கள் முன்பு – ஏதோ சில ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைக்காகப் போராடும் ஒரு குழுவோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

அந்தக் குழுவின் தலைவி பில்கிஸ் கான் என்ற இஸ்லாமியப் பெண்.

சிறுபான்மை மதத்தினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அல்லல்படும் பெண்களின் விடுதலை என்ற சீரிய நோக்குடன் செயல்படுவதாகச் சொல்லப்படும் தன்னார்வ அமைப்புக்களை, இது போன்ற பல சமூக சேவகிகள் துவங்கி – அவற்றைத் தனியார் வியாபார ஸ்தாபனங்களாக்கி, அவற்றுக்கு வெளி நாடுகளிலிருந்து கிடைக்கும் சந்தேகிக்கும்படியான நன்கொடைகளை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் துரோகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.

இவர்களுள் பெரும்பாலானோர் பாரதத்தின் எதிரி நாடுகளுக்கு இலை மறைவு காய் மறைவாக உதவுபவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகிறார்கள். அவை நிரூபணமாகின்றனவா இல்லையா என்பது சட்டச் சிக்கல்.

இந்த விபரீத செயல்பாட்டிற்கான சிறந்த உதாரணம் – டீஸ்டா ஸெடல்வாட் என்ற பெண். குஜராத் மாநிலத்தில் 2002-ல் நடந்த மதக் கலவரங்களில் உயிரிழந்தோருக்கு உதவுவதாகச் சொல்லிக்கொள்ளும் டீஸ்டா, பல வெளி நாடுகளிடமிருந்து பணம் பெற்று அத்தொகைகளை தனது சுய லாபத்திற்காகவும், சில தேச விரோதச் செயல்களுக்காகவும் செலவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளார்.

இது வரை நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பு என்ற நிலையை அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடையவில்லை. ஆனால், அவரது பெயர், பெரிய அளவில் ரிப்பேராகி  விட்டது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கை பில்கிஸ் தாக்கல் செய்தாள். அதில் தொடர்புள்ள சிலருக்கு சாவித்ரி உதவ ஆரம்பித்தபோது, எங்களது அலுவலக மேல் அதிகாரிகளின்  “கவன” கூர்மையான பார்வையின் வலையில் சிக்கினாள்.

பில்கிஸ் கான் – பல தேசத் துரோகக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பவள்.

அதற்கான ஆதாரங்கள் என்னிடம் அளிக்கப்பட்டன.

ஆனால், அந்த ஆதாரங்களை சாவித்ரியிடம் அளிக்க எனக்கு அனுமதியில்லை.

“அந்தப்பெண்ணுடனான தொடர்பைத் துண்டித்தே ஆக வேண்டும், ஏனெனில் அவள் எக்காலத்திலும் நம்ப முடியாத ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத்தை, கொள்கையாகக் கொண்ட எதிரிகளுக்கு உளவு சொல்லும் பெண்,” என்று நான் பொய் கலந்த ஒரு காரணத்தைக் கூறி, வீட்டில் சண்டையைத் துவக்கினேன்.

“ஆதாரமற்றக் குற்றச்சாட்டுக்களை நான் நம்பவே மாட்டேன்,” என்றாள் சாவித்ரி.

சண்டையும் பூசலும் வளர்ந்தன.

என்னை மனிதாபிமானமே இல்லாத ஜாதி வெறியன், மத வெறியன் என்றெல்லாம் சாவித்ரி பழிக்க ஆரம்பித்தாள்.

“நமது இயக்கத்தின் செயல்களைக் கண்டறிய இந்தியாவின் எதிரி சக்திகள்  உங்களது மனைவியைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று என்னிடம், நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், நேரில் டெல்லிக்கு அழைத்து சொன்னார். அதற்கான ஆதாரங்களையும் அளித்தார்.

எனக்கு – இரண்டே வழிகள் தான் மிஞ்சின.

வேலையை ராஜினாமா செய்து மனைவியுடன் வாழலாம். அல்லது மனைவியிடமிருந்து பிரிந்து உத்தியோகத்தில் தொடரலாம்.

நான் இரண்டாவது சாய்ஸை பயன்படுத்துவது என முடிவெடுக்க, அவளிடமிருந்து வந்த தடித்த வார்த்தைகள் தான் முக்கிய காரணம், எனலாம். எங்கள் மணவாழ்வு என்ற கண்ணாடி உடைந்து விட்டதாகவே எண்ணினேன். அதை ஒட்டவைத்தாலும் அதன் விரிசல்கள் மறையப்போவதில்லை. அவற்றின் காரணமாக, மீண்டும் அதே கண்ணாடி உடையலாம். அப்படி நிகழ்தால், வாழ்க்கை உண்டு முடித்த வாழை இலை நிலைய அடைந்து விடும்.

எனது மனைவி மீதுள்ள காதல் என்னில் மடிந்ததிருக்கவில்லை, மடியப்போவதும் இல்லை. ஆனால் உத்தியோகத்தைத் துறந்து அவளுடன் வாழ்வது என முடிவெடுத்தால், வருங்கால வாழ்வு கேள்விக்குறையாக இருக்கும். ஆனால், உத்தியோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். இறுதியில், கடந்தகாலக் கசப்புணர்வுகள் காழ்ப்புணர்வுகளாகி, வாழ்க்கை கசடாகி விடும்.. இதை எல்லாம் கணக்கிட, அமரர் அப்துல் கலாம்போல் நான் ராக்கெட் விஞானம் கற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தவுடன் விஷயம் விளங்கி விட்டது.

வீட்டில் வாக்குவாதங்களை வலுக்கச் செய்தேன்.

அக்னியை முறைப்படி வலம் வந்து உருவான எங்கள் உறவு விவாஹரத்து என்ற சொல்லுடன் நீதிமன்றத்தில் மடிந்தது. எனது வேலையில் மூழ்கினேன்.

உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மனம் குரங்காகி விடும்.

அந்த உடல் பசியைத் தணிக்க – எனது பணியின் ரகசியச் செயல்பாட்டின் தேவைகள் நிமித்தமாக, அமைதுள்ள சில “நண்பிகளின்” – உடல் ரீதியான “பரோபகாரச் செயல்களைப்” நானும் சரி, எனது நிலையிலுள்ள வேறு சில கலீக்ஸும் சரி, பணம் கொடுத்துப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. பொது வாழ்வில் இது சர்வ சாதாரணம். முன்னொரு காலத்தில், காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க ஒரு புகழ்பெற்ற நடிகை பணத்திற்காக மட்டும் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார் என, வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா எனப் புரியாத நிலையில் சொல்வோர் உண்டு. தனது ஒரு ஆப்த நண்பரிடம் ஃபரூக் பேசுகையில், “நான் அந்த நடிகையை ஆணாக என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதே பணியை, அப்பெண்ணை அனுப்பிய ஒரு பெண் அரசியல்வாதி, தன்னிடம் ஆண் குறி இல்லாதபோதிலும், அதே பணியை எனது ஆட்சிக்குச் செய்தார்,” என்றாராம். அத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை உருவாக்கியவர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஒரு அதிகாரி, எங்கள் அமைப்பில் இன்று பெரிய பொறுப்பில் பணி புரிகிறார்.

பல பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், கடத்தல்காரர்கள், நிழல் உலக தாதாக்கள் – இப்படிப் பலதரப்பட்டவர்கள் – விலை மாதுகளைப் பயன்படுத்துவது பழக்கம். இது போன்ற பெண்கள் – பொதுவாக சினிமாவில் ஹீரோயினாவதற்காக, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் குடிபுகுந்து, கெட்டுக் குட்டிச்சுவராவதும், பின்பு அதே குட்டிச்சுவர்கள் மாளிகைகளாவதும் சர்வ சாதாரணமான விஷயம்.

3 தொழில்களுக்கு மட்டும் என்றுமே தொய்வு கிடையாது.

முதலாவது – மதத்தைப் பயன்படுத்தி – பணம் சேர்க்கும் சாமியார்களின் வியாபாரம். இவர்கள் கூறும் “தத்துவ போதனைகள்” பலரைக் கவரும். அதில் சிலர் – இவர்களைத் தங்கள் வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவது வழக்கம். அப்படிப் பயன்படுவோர் – சில நேரங்களில் ராஸலீலைகளில் ஈடுபடுவது சகஜம். பயன்படுத்துவது, பயன்படுவது ஆகிய செயல்பாட்டுக்களால், பலருக்கு – சாமியார்கள் உட்பட – “படுத்தலில் சிக்கும்” அபாயங்கள் நிகழ்ந்தன, நிகழ்கின்றன, இனியும் நிகழும்.

இரண்டாவது – ஜோதிடர்களின் ஆரூடம் சொல்லும் பிஸினஸ். செல்வம் குவிந்திருந்தாலும் சரி, அல்லது குவிந்த செல்வம் குழிக்குள் சென்றதால் மனிதர்கள் குசேலர்கள் ஆகி இருந்தாலும் சரி, ஜோதிடர்கள் சொல்லும் ஆரூடங்களை நம்பி – வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திக் கோள்வது சகஜமான விஷயம்.

மூன்றாவதாக – மனித குலத்தின் கேடுகெட்ட சில உதாரணங்களான பொறுக்கிகளின் காமப்பசியைப் போக்க உதவும் விலை மாதுக்கள். எங்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும், இந்தத் தொழிலில் தொய்வே ஏற்படாது.

ரகசியத் தகவல்களைச் சேகரிக்க, மூன்றாம் ரகமான  இந்த “அடி-யாளிகள்” பயன்படுவது போல எந்த அண்ணனும், எந்தத் தம்பியும் பயன்படமாட்டார்கள். இப்பெண்களுக்கு சில நேரங்களில் விழும் வக்கிர எண்ணங்களுள்ள ஆண்களின் அடிகள் எங்களது இயக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. அடிகள் வாங்கும் நேரங்களில் ஏற்படும் வலிக்கான விலையை ஆம்மாதிரி மாதுக்கள் எளிதில் வசூலித்து விடுவார்கள். பெரும்புள்ளிகளின் உளரல்கள் அவர்களது முகத்தில் பிற்காலத்தில் கரும்புள்ளிகள் ஆகின்றனவோ இல்லையோ, இச்செயல்களால் பல பயங்கரவாதச் சதித் திட்டங்களை எங்கள் இயக்கம் மோப்பம் பிடித்து, முறியடித்துள்ளது.

14 வருடங்களுக்கு முன்பு

சாவித்ரி மிகவும் வசதியான, பரந்த மனப்பான்மையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவள். விவாஹரத்திற்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் வாழும் தாய்-தந்தை-சகோதரர்களுடன் வாழச் சென்று விட்டாள். எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது.

2002ல் கோத்ரா என்ற ஊரில் ஹிந்துக்கள் நிறைந்த ரயில் பெட்டியை சில இஸ்லாமியர்கள் தீக்கிரையாக்கிச் சுட்டுப் பொசுக்கினர் என்ற செய்தி வந்தது. பதிலுக்கு இஸ்லாமியர்களை ஹிந்துக்கள் தாக்கினர் என்ற செய்தியும் வந்தது..

பில்கிஸ் கான் அந்தக் காலகட்டத்தில் அஹமதாபாத்தில் தங்கி இருந்தாள். அவளது குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு, அவளையும், அவளது கணவன் அஷ்ரஃபையும், எனது மாஜி மனைவி, அவளது தாய் தந்தையர் தடுத்தும், தனது வீட்டில் தங்க வைத்தாள். பின்பு தாக்கவந்த ஹிந்துமத வெறிக்கும்பல் – எனது மனைவியின் குடும்பத்தைப் பழிவாங்க, அவளது பங்களாவிற்கு நெருப்பு வைத்தது.

மற்றவர்களுடன் சாவித்ரியும் நெருப்பில் கருகி இறந்து போனாள்.

சொந்தம் என்ற கை விலங்கும், பந்தம் என்ற கால் விலங்கும் இல்லாத, உணர்ச்சிகளின் ஊனமுற்ற நிலையில், நான் வாலில்லாத விலங்காய் மாறினேன்.

வேட்டைக்கு உதவினாலும், கொலை போன்ற குற்றங்களைக் கண்டுபிடிக்க ஒத்துழைத்தாலும், நகரில் எச்சில் இலைகளுக்கு அலைந்தாலும், நாய்களுக்கேகூட தேவைக்கேற்ப உடலுறவு பார்ட்னர்கள் கிடைத்து விடுவது வழக்கம். வனிதாவை நான் அப்படித் தான் தேடிப் பிடித்தேன்.

தன்னை ஒரு “தெலுங்கு தேசத் தலைவன்” கெடுத்தான் என்றாள் வனிதா.

-தொடரும்

Advertisements