உளவுகாத்தகிளி – 3

இந்தக் கதையின் முதல் அத்தியாய லிங்க் – இங்கே!

இக்கதையின் இரண்டாவது அத்தியாய லிங்க் – இங்கே

லண்டன், இன்றே

விசிட்டிங் கார்டில் “துர்லபாடி சாலிவாஹனன் சிவபுண்ணியம் விக்ரம் ராவ்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் உள்ளர்த்தம் என்னைக் கொஞ்சம் திக்குமுக்காடச் செய்தது.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்துத் தரப்பினரின் பெயர்களுடன் ஒரு “குடும்பப் பெயர்” இணைக்கப்பட்டிருப்பதைப் பலர் கவனித்திருக்க மாட்டார்கள். அப்பெயர் மூலம் ஒருவர் எந்த ஜாதிப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

“துர்லபாடி, கர்கிபாடி, பாமுலபர்த்தி,” என த, ட என்ற உயிர்மெய் எழுத்துக்களில் முடியும் “குடும்பப் பெயர்கள்” அந்தணர் வகுப்பைக் குறிக்கும். இதில் சில விதிவிலக்குகள் உண்டு. அமரர், முன்னாள் ஆந்திர முதலரும், பழம்பெரும் நடிகரும் ஆன என் டி ஆர் அவர்களின் மாப்பிள்ளை பெயர் டக்குபாடி வெங்கடேஸ்வர ராவ். அவர் கம்மா நாய்டு வகுப்பைச் சேர்ந்தவர். பிரசித்திபெற்ற சினிமா டைரக்டரும், நடிகரும் அரசியல்வாதியும் ஆன தாசரி நாராயண் ராவ் – காபு வகுப்பைச் சேர்ந்தவர். சூட்சுமமான வேறு பல தகவல்களை பெயர்களுடன் இணைத்து ஆராய்ந்தால் தான் ஜாதிப் பெயர்களின் சரியான விவரங்கள் புரியும்.

சரி.

எனக்கும், சாலிவாஹனன் என்ற பெயருக்கும் உள்ள சம்பந்தத்திற்கு வருவோம்.

இப்போது நடக்கும் கலியுகத்தின் சம காலத்தை, சம்ஸ்கிருத்த்தில், “சாலிவாஹன சகாப்தம்” என்று வழிபாட்டு நேரங்களில் சடங்கைச் செய்ய உதவும் அய்யர்கள் கூறும்படி பணிப்பார்கள்.

மறைந்த எனது தாய் தந்தையருக்குத் திதி கொடுக்கும்போது நானும் இச்சொற்றொடரைச் சொல்வதுண்டு.

சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு, இன்றைய மத்தியப் பிரதேசமாகி விட்ட மாநிலத்தில் அமைந்துள்ள உஜ்ஜெயின் நகரில் விக்ரமாதித்தன் என்ற மாமன்னன் ஆட்சி புரிந்தான். பொதுவாக அவனை நல்லவன் என்றே சொல்வார்கள். அவனது ஆட்சி நல்லபடியாக அமைய ஒரு வேதாளமும், அவனது தலைமை அமைச்சர் பட்டியும் உதவியதாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அவனது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் – சாலிவாஹனன்.

நாகர் குலத்தில் பிறந்து, குயவர்கள் மத்தியில் வாழ்ந்து வளர்ந்த சாலிவாஹனன், மண் பொம்மைகளாலான ஒரு படையைத் தயாரித்து, அவற்றில் உயிரைப் புகுத்தி, விக்ரமாதித்தனின் பெரும்படையைத் தோற்கடித்து அரசனானான் எனச் சில சரித்திரக் குறிப்புக்களில் இருப்பதைச் சுட்டிக் காண்பிப்போர் உண்டு. சாலிவாஹனனின் பிறவி கொஞ்சம் மர்மமானது. ஆந்திரத்தின் வடபகுதியில் அவன் பிறந்தான் எனச் சொல்வோரும் உண்டு.

அக்கூற்றுக்கான அசைக்க முடியாத ஆவணங்கள் உண்டா இல்லையா என்பது எனக்குத் தெரியாத விஷயம்.

உயர் ஜாதியினரிடமிருந்து ஆட்சிக் கட்டிலைப் பறித்து, பாமரர்களின் ஆட்சி என்ற புரட்சியை சாலிவாஹனன் நிகழ்த்தினான். அதன் விளைவாக, பாரத நாட்டில் இந்தப் பெயர் புழக்கத்தில் புகுந்தது என்பதை மட்டும் அறிந்து வைத்திருக்கிறேன்.

வனிதாவுக்கும் எனக்கும் உள்ள கசமுசா விஷயத்தைச் சொல்வதற்கு முன்னால், என்னைப் பற்றிக் கொஞ்சம் விளக்கியாக வேண்டும்.

நான் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த துர்லபாடி விக்ரம் ராவ் என்ற பார்ப்பனன்.

சிறு வயது முதல் காவல்துறையின் உளவுத் துறையில் பணி புரிய வேண்டும் என்ற கனவுடன் வாழ்க்கையைத் துவங்கினேன். 86-ம் வருடம் ஐ பி எஸ் தேர்வில் எனக்கு முதலிடம் கிடைத்தது.

ஒரு சிறு துளித் தகவல் மூலமாக பல ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் எனது திறமையையும், பல மொழிகளில் எனக்குள்ள தேர்ச்சியையும் கண்ட அப்போதைய மத்திய உள்துறை அதிகாரிகள், அக்காலத்தில் தமிழகக் காவல்துறையின் உளவுத் துறை டி ஜி பி ஆக இருந்த மோஹன்தாஸிடம் என்னை எவ்வாறு பயன்படுத்தலாம் எனக் கருத்துக் கேட்டார்கள்.

தமிழக முதல்வர் அமரர் எம் ஜி ஆர் அவர்களின் வலது கரமாக அக்காலத்தில் திகழ்ந்தவர் மோஹன்தாஸ்.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்

86ல் நான் அவரைச் சந்திப்பதற்குச் சில வாரங்கள் முன் – சில மணி நேரத்தில் எல்லா இலங்கைத் தமிழ் தீவிரவாதக் குழுக்களிடமிருந்த எல்லா ஆயுதங்களையும் மிகவும் எளிதான முறையில், எந்த சலசலப்போ, வன்முறையோ இல்லாமல் அவர் பறித்தார். பின்னர், அரசின் உத்திரவுகளுக்கிணங்க, அதே ஆயுதங்களை அவர் அதே குழுக்களுக்கு திரும்ப அளிக்கப் பணிக்கப்பட்டார். இதில் அவருக்குப் பலத்த ஏமாற்றம் என்பதை பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். விரைவில் அவர் மாற்றப்பட்டார்.

காவல் துறையின் வீட்டு வசதி நல வாரியத் தலைவர், பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் போன்ற உப்புமாத் தனமான தண்டனைப் பதவிகளில் அவர் தனது பணியின் இறுதி ஆண்டுகளைக் கழித்து ரிட்டையர் ஆனார்.

வருங்காலங்களில் ஏற்படவிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரு ரகசிய ஸ்தாபனத்தை மத்திய அரசு உருவாக்கி, அதனை இயக்கும் கடிவாளத்தை மத்திய அரசு தன் கைகளில் வைத்திருக்க வேண்டும், என 1986ல் மோஹன்தாஸ் ஒரு யோசனையை முன்வைத்தார். அது ஏற்கப்பட்ட விஷயம் மோஹன்தாஸிடமே கூட சொல்லப்படவில்லை.

மிகவும் புத்திசாலிகளான ஐ பி எஸ் அதிகாரிகள் மட்டுமே அந்தப் படையில் சேர்க்கப்பட்டார்கள். நான் அப்போது கத்துக்குட்டி. ஏ எஸ் பி. அதில் சேர எனக்கு வாய்ப்பளித்தார்கள். சேர்ந்தேன்.

மோஹன்தாஸ் எனக்களித்த அட்வைஸ்:

“வருங்காலத்தில் உளவு பார்க்கும் தொழில் மிகவும் சிக்கலான ஒன்றாகி விடும். பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை – குற்றம்புரிபவர்கள் ஏதோ சாதாரணக் குடிகாரன் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளைப் போலப் பயன்படுத்துவார்கள். இதைச் சமாளிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் ஒரு ரகசிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்,” என்று நான் பரிந்துரை வழங்கினேன். அரசியல்வாதிகள் அதை ஏற்க மாட்டார்கள் என்பதை அறிவேன். இப்படிப்பட்ட அமைப்புகள் ஒவ்வொரு நாட்டிலும் உருவாகி, அவை உள் நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி, ரகசியமாக, ஒன்றோடொன்று தொடர்பு வைத்துச் செயல்பட வேண்டும். அதன் ஒரே பணி – பயங்கரவாதிகள் என்னென்ன செப்பிடு வித்தைகளை கையாளத் திட்டமிடுவார்கள் என யூகித்து, அவற்றைச் செயல்படுத்துமுன், முறியடிக்க வழிகளைக் கண்டுபிடிப்பது.”

அப்படையில் நான் சேர்ந்துவிட்டேன் என்ற தகவலை அவரிடம் நான் சொல்லவில்லை.

-தொடரும்

 

Advertisements